போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற அரசு ஜீப்பிற்கு பூட்டு போட்ட போலீசாருக்கு குவியும் பாராட்டு..!
ராமநாதபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிநீர் வாரிய அரசு ஜீப்பிற்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் நகரில் மழைநீர் செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி சார்பில் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக நகரின் முக்கிய சாலை பகுதிகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் காரணமாக சிறிய தெருக்களில் அதிக வாகனங்கள் சென்றுவருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து போலீசார் இந்த சாலை பகுதிகளில் காலை முதல் இரவு வரை இடைவிடாத பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் சாலைத்தெருவில் வணிக வளாகம் ஒன்றில் குடிநீர்வாரிய காவிரி குடிநீர் திட்ட அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கான ஜீப் அந்த வளாகத்தில் நிறுத்தி வைக்க வசதி இல்லாத காரணத்தினால் சாலைத்தெருவை ஒட்டிய வண்டிக்கார் தெரு பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.
அரசு அலுவலக ஜீப் என்பதால் அதனை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் போக்குவரத்து நெருக்கடியை சமாளித்த வந்தனர். இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சம்பந்தப்பட்ட வாகன டிரைவர் உள்ளிட்டோரிடம் வாகனத்தை வேறு இடத்தில் ஓரமாக நிறுத்துமாறு கூறினார்களாம். அதற்கு எந்த பயனும் இல்லை என்று கூறப்படுகிறது.
தற்போது போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அரசு ஜீப் அதேபோன்று சாலையில் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் அங்கு விரைந்து சென்று சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த குடிநீர் வாரிய ஜீப்பிற்கு பூட்டு போட்டுவிட்டு சென்றார். மாலையில் வாகனத்தை எடுக்க வந்த டிரைவரும், உதவி பொறியாளர் அதிகாரியும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக இனி இதுபோன்று சாலையில் ஜீப்பை நிறுத்தமாட்டோம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு ஜீப்பை எடுத்து சென்றனர். ராமநாதபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அரசு ஜீப்பாக இருந்தாலும் போக்குவரத்து காவல்துறையினர் பூட்டு போட்டு எழுதி வாங்கியதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.