வட்டார போக்குவரத்து, பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை


வட்டார போக்குவரத்து, பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனை
x

பெரம்பலூர், அரியலூரில் வட்டார போக்குவரத்து, பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லட்சக் கணக்கில் பணம் சிக்கியது.

பெரம்பலூர்

லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில், பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வாகன பதிவு, ஓட்டுனர் உரிமம் பெறுதல், வாகன தகுதி சான்று பெறுதல் உள்ளிட்ட நடைமுறைகள் நடைபெறுவதால் வேலை நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வரப்பெற்றதை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி உள்ளிட்ட மொத்தம் 7 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் திடீரென்று பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து, அலுவலகத்தின் வாயில் கதவை பூட்டி உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள், ஊழியர்கள், இடைத்தரகர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.

பணம் சிக்கியது

மேலும் அலுவலர்கள், ஊழியர்கள், இடைத்தரகர்களிடம் இருந்து பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் கணக்கில் வராத பணமாக இருந்தால் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர்.

இதில் இடைத்தரகர்கள், பொதுமக்கள் என 7 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 700 சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது.

மேலும் அலுவலகத்தின் எதிரே உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளி இடைத்தரகர்களின் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாலையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடங்கிய சோதனை இரவிலும் நீடித்தது.

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில்...

இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மேலக்குடியிருப்பில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், செந்துறை துணை வட்டாட்சியர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பவுன்ராஜ், ரவி மற்றும் போலீசார் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென நுழைந்து சோதனை செய்தனர்.

இதில் சார் பதிவாளர் பிரகாஷிடம் இருந்து கணக்கில் வராத ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலக பொறுப்பு சார்பதிவாளர் பிரகாஷ் மற்றும் உள்ளே இருந்த அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று அஷ்டமி தினம் என்பதால் பத்திரப்பதிவு அதிகம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Next Story