கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடன்உதவி
நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடன்உதவி வழங்கப்பட உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கலெக்டர் ஸ்ரேயாசிங் அழைப்பு விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க மானியத்துடன் கடன்உதவி வழங்கப்பட உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கலெக்டர் ஸ்ரேயாசிங் அழைப்பு விடுத்துள்ளார்.
கடன்உதவி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7½ கோடி மதிப்பீட்டில் கறவை மாடு வாங்க, மானியத்துடன் வங்கி கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்திற்கு 11 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சத்து 95 ஆயிரமும், பழங்குடியினர் 3 பேருக்கு தலா ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் இலக்கு நிர்ணயித்து அரசாணை வரப்பெற்று உள்ளது. இதற்கான நிபந்தனைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து இருக்க வேண்டும்.
இணையதளத்தில் பதிவு
விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்படும் திட்டத்தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் 30 சதவீத மானியம் அதாவது ரூ.45 ஆயிரம் மானியமாக விடுவிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவரிடம் உரிய காப்பீடு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் http://appliction.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.