மோட்டார் சைக்கிள் மீது லோடு வேன் மோதல்; வாலிபர் பலி; உறவினர்கள் சாலைமறியல்
நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது லோடு வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது லோடு வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
ஆஸ்பத்திரி ஊழியர்
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை வடக்கு செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காட்டுராஜா. இவருடைய மகன் செந்தில் முருகன் (வயது 28).
இவர் நெல்லை வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தற்காலிக லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நெல்லை முத்துராம் தியேட்டர் முன்பிருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பரிதாப சாவு
இதனை பார்த்து பயந்த செந்தில் முருகன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிரே பழங்களை ஏற்றிக்கொண்டு வந்த லோடு வேன், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த செந்தில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலைமறியல்
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்தனர். அப்போது லோடு வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் நெல்லை சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசார் தடியடி
அப்போது போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே 2 பேரை இறக்கி விட்டனர். இதையடுத்து போலீசார் பிடித்துச் சென்ற அந்த நபரை விடுவித்தால் மட்டுமே சாலைமறியலை கைவிடுவோம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், அவரை விடுவிப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் அந்த நபரையும் போலீசார் விடுவித்தனர்.
வாகனங்கள் திருப்பி விடப்பட்டன
சாலைமறியல் போராட்டத்தையொட்டி அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. விபத்தில் பலியான செந்தில் முருகனுக்கு சீதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகின்றன.
விபத்தில் கணவர் இறந்த தகவல் அறிந்ததும் சீதா கதறி அழுதார். அது பார்ப்பவர்களின் நெஞ்சை கரைக்கும் செயலாக இருந்தது. அவரை உறவினர்கள் தேற்றினர்.