சுமைதூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் போராட்டம்
திருச்சி ரெயில்வே குட்ஷெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி ரெயில்வே குட்ஷெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தரக்குறைவாக...
திருச்சி ரெயில்வே குட்ஷெட்டில் சரக்குகள் ஏற்றவரும் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இந்தநிலையில், அந்த லாரிகளை குட்ஷெட்டில் பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அப்புறப்படுத்தும்படி கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில், லாரி டிரைவர்களையும், சுமைதூக்கும் தொழிலாளர்களையும் அவர் தரக்குறைவாக பேசியதுடன், அவர்களை தள்ளி விட்டு தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டரின் செயலை கண்டித்து, ரெயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் குட்ஷெட் சாலையில் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மிரட்டினர். இதனால், அவர்களை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்மூட்டைகள் தேக்கம்
இந்த போராட்டம் காரணமாக நாகையில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நெல் மூட்டைகள் அனைத்தும் 89 பெட்டிகளில் தேக்கமடைந்தன. ஏற்கனவே நெல் மூட்டைகளை ஏற்றிய லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதைத்தொடர்ந்து, ரெயில்வே வணிக மேலாளர் மோகனபிரியா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமைப்பணி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், உங்கள் பிரச்சினையை எடுத்துபூர்வமாக கொடுங்கள். சம்பந்தப்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறேன் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சரக்குகளை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.