அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மூடியது ஏன்? -தமிழக அரசு விளக்கம்


அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மூடியது ஏன்? -தமிழக அரசு விளக்கம்
x

அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மூடிவிட்டு, சமூக நலத்துறை வசம் ஒப்படைத்தது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

அரசு பள்ளி கல்வித்துறையுடன் இணைத்து எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களை கல்வித்துறை மூடியது ஏன்?, அதனை சமூகநலத்துறையிடம் ஒப்படைத்தது ஏன்? என்பது தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

போதிய ஆசிரியர்கள்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களாக இருப்பினும், அவர்களால் அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு குழந்தைகளை கையாள்வதில் சிக்கல்களும், புரிதல் இன்மையும் நீடித்து, அவ்வகுப்புகளை செம்மையாக கையாளும் நிலை இல்லாத சூழ்நிலையே காணப்பட்டது. தொடக்கக்கல்வி இயக்கத்தில், 2013-14-ம் கல்வியாண்டு முதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில் கடந்த கல்வியாண்டின் இறுதியில் தொடக்க வகுப்புகளை கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் 4 ஆயிரத்து 863 காலிப்பணியிடங்கள் ஏற்பட்டது. இதனால் 3 ஆயிரத்து 800 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளை கையாள ஒரே ஒரு ஆசிரியர்தான் உள்ளார்.

போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கு சரியான முறையில் அடிப்படைக்கல்வி போதிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டு அதன் விளைவாக மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக குறைந்தது.

ஆசிரியர்கள் தேவைப்படுகிறது

புதிதாக அமைந்த தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்றுக்கு பின்னர், பள்ளிகள் பாதுகாப்பாக திறக்கப்பட்டு அரசு பள்ளிகளில் 5 லட்சத்துக்கு மேல் புதிதாக மாணவர்கள் சேர்ந்தனர். அதில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் மட்டும் 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளின் மேல் நம்பிக்கை வைத்து கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

இப்படி கூடுதலாக சேர்ந்தவர்களில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் என்று வைத்தால், 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களோடு சேர்த்தால் மொத்தமாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டு தொடக்கக்கல்வியின் தரம் குறைய வாய்ப்பு அதிகமானது.

இதுகுறித்து அனைத்து உயர்மட்ட அலுவலர்கள் கூட்டம் கூட்டப்பட்டு விவாதித்து, அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளை கையாளுவதற்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவைப்படும் சூழலை கருத்தில்கொண்டு, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர்.

முடிவு எடுத்தது ஏன்?

மேலும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை கருத்தில்கொண்டு, முதல்-அமைச்சரால் 'எண்ணும் எழுத்தும்' எனும் திட்டம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், சரியான பாதையில் மாணவர்களிடத்தில் கொண்டுசேர்க்கவும் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்துக்கு போதுமான எண்ணிக்கையில் இன்னும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

தொடக்கக்கல்வி இயக்ககத்துக்கு சுமார் 9 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் தேவையுள்ள நிலையிலும், 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திடவும் அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே இருந்த குழந்தைகளுக்கு முந்தைய நடைமுறையை பின்பற்றி இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிகமாக கற்றல் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

அதிக கவனம் செலுத்தவேண்டும்

முதல்-அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட உள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக செயல்படுத்தும்போது தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே உள்ள கற்றல் இடைவெளியை குறைத்து, கற்றல் விளைவுகளில் மிக உன்னதமான நிலையை அடைய முடியும். இப்பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்பதாலும், 1 முதல் 3 வரையிலான வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் 3 ஆண்டுகளுக்கு பின்னர், தேசிய அளவிலான அடைவு சோதனை முடிவுகளில் (என்.ஏ.எஸ்.) 27-வது இடத்தில் இருக்கும் தமிழகம், முதல் 10 இடத்துக்குள் ஓர் இடத்தை பிடிக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story