காவிரி கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்


காவிரி கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்
x
தினத்தந்தி 29 Aug 2022 12:45 AM IST (Updated: 29 Aug 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

அரசு வீடு கட்டி கொடுக்கப்படும் என்றும், காவிரி கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் வெள்ள சேதத்தை பார்வையிட்ட பிறகு ராஜேஷ்குமார் எம்.பி. கூறினார்.

நாமக்கல்

அரசு வீடு கட்டி கொடுக்கப்படும் என்றும், காவிரி கரையோர மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் வெள்ள சேதத்தை பார்வையிட்ட பிறகு ராஜேஷ்குமார் எம்.பி. கூறினார்.

ராஜேஷ்குமார் எம்.பி.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அண்ணாநகர், கலைமகள் தெரு, இந்திரா நகர், மணிமேகலை தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இந்த பகுதி மக்கள், குமாரபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் கலெக்டர் ஸ்ரேயாசிங், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் இளவரசி, குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, நகராட்சி (பொறுப்பு) ஆணையாளர் ராஜேந்திரன், தி.மு.க. மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம், நகர செயலாளர் எம்.செல்வம், நகராட்சி துணைத் தலைவர் கோ.வெங்கடேசன், தொழில் அதிபர் மு.ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து வசதிகளும்...

தொடர்ந்து மழை வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்ட கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளோம். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, உணவு, உடை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம்.

அதுமட்டும் அல்லாமல் திருச்செங்கோடு பகுதியில் மழைவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுத்துள்ளோம். இதுதவிர அந்த பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக முதல்- அமைச்சரை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன். இதுதவிர காவிரி கரையோர மக்களுக்கு வீடு வழங்குவது குறித்து ஏற்கனவே கணக்கெடுக்ப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

வீடு கட்டப்பட்ட பிறகு குமாரபாளையம் காவிரி கரையோரங்களில் வசிக்கும் 520 பேரிடம் முறையாக விண்ணப்பங்கள் பெற்று தகுதியின் அடிப்படையில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். காவிரி கரையோர மக்களின் வாழ்வாதாரத்தை தி.மு.க. அரசு பாதுகாக்கும்.

இவ்வாறு கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. கூறினார்.

திருச்செங்கோடு

முன்னதாக கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி. எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சக்திநாயக்கன் பாளையம் ஊராட்சி தோப்பு வளவு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவருடன் கலெக்டர் ஸ்ரேயாசிங், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, உதவி கலெக்டர் இளவரசி, தாசில்தார் அப்பன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசி, புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story