லைவ் அப்டேட்ஸ்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு...!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
Live Updates
- 11 July 2022 6:41 AM IST
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு காலை 5 மணி முதல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- 11 July 2022 6:39 AM IST
அதிமுக பொதுக்குழு கூட்டமும், அதன் பின்னணியும்...!
ஜெயலலிதா மறைவு
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பிறகு கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. அதாவது ஒற்றை தலைமை நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை உருவாக்கப்பட்டது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆட்சியை பொறுத்தவரை, முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்தனர்.
ஒற்றை தலைமை கோஷம்
ஆனால் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. அதன்பிறகு உள்கட்சிக்குள் பிரச்சினை எழுந்தது. முதலில் இலைமறை காயாக இருந்த பிரச்சினை, பின்னர் வீதிக்கு வந்தது.
கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை கோஷத்தை கையில் எடுத்தனர். பொதுக்குழு கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியிருந்தது வெளிப்படையாக தெரிந்தது.
23 தீர்மானங்கள் நிராகரிப்பு
ஆனால், கூட்டத்தில் ஒற்றை தலைமை கொண்டுவர முடியாத நிலையில், நிறைவேற்றப்படுவதற்காக தயாராக இருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் அறிவிக்கப்பட்டதுடன், அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் ஜூலை 11-ந் தேதி (இன்று) கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மீண்டும் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு இன்று காலை 9.15 மணிக்கு நடக்கிறது. கடந்த முறை மண்டப அரங்கில் கூட்டம் நடந்தது. வெளியே உள்ள காலியிடத்தில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது.
பிரமாண்ட பந்தல்
ஆனால், இந்த முறை பொதுக்குழு கூட்டமே மண்டபத்துக்கு முன்புறம் உள்ள காலியிடத்தில் பிரமாண்ட பந்தல் அமைத்து நடத்தப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்து மொத்தம் 2,665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடந்த 1-ந் தேதியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் நேற்று வரை 2,455 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒற்றை தலைமையை எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு குறைந்து வருவதால், பொருளாளர் என்ற முறையில் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்பாரா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
100 பேர் அமரும் வகையில் மேடை
பொதுக்குழுவுக்காக வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் கோயம்பேடு, மதுரவாயல் பகுதியில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையிலேயே 100 பேர் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. கூட்ட அரங்கத்திலும், வெளியிலும் ஒரு இடத்தில்கூட ஓ.பன்னீர்செல்வத்தின் படம் இடம்பெறவில்லை.
இடைக்கால பொதுச்செயலாளர்
இந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட இருக்கிறார்.
அதேபோல், பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்பும் இந்த கூட்டத்திலேயே வெளியாக இருக்கிறது. எனவே, இன்றைய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.
நவீன அடையாள அட்டை
ஒருவேளை, கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் வந்து கலந்துகொண்டாலும், அவரையும், அவரது ஆதரவாளர்களை சமாளிப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டம் தீட்டி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த முறை கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருசிலர் போலி அடையாள அட்டையுடன் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இந்த முறை அதுபோன்று தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காக, ‘கியூ.ஆர். கோடு’ கொண்ட அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருப்பது போல பொதுக்குழு கூட்ட நுழைவுவாயிலில் அதிநவீன எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அரங்கத்திற்குள் நுழைய முடியும்.
முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு
பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், பென்ஜமீன், காமராஜ் உள்ளிட்டோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கட்சி ரீதியாக அ.தி.மு.க.வில் மொத்தம் 75 மாவட்டங்கள் உள்ளன. இதில், 70-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு
இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது.
இந்த தீர்ப்பை பொறுத்தே அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? இல்லையா? என்பது தெரியவரும். அதன்பின்னரே அடுத்தக்கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இருதரப்பினரும் தீவிர ஆலோசனை
இந்தநிலையில் சென்னை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு நேற்று சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.