பலம், பலவீனத்தை பட்டியலிட்டு வாழ்க்கையில் சாதிக்க தயாராக வேண்டும்- முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு


பலம், பலவீனத்தை பட்டியலிட்டு வாழ்க்கையில் சாதிக்க தயாராக வேண்டும்- முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு
x
தினத்தந்தி 12 Aug 2023 7:00 PM GMT (Updated: 12 Aug 2023 7:01 PM GMT)

பலம், பலவீனத்தை பட்டியலிட்டு வாழ்க்கையில் சாதிக்க தயாராக வேண்டும் என கல்லூரி மாணவிகளுக்கு முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை கூறினார்.

மயிலாடுதுறை

பலம், பலவீனத்தை பட்டியலிட்டு வாழ்க்கையில் சாதிக்க தயாராக வேண்டும் என கல்லூரி மாணவிகளுக்கு முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுரை கூறினார்.

கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் மாணவர் வழிகாட்டுதல், கலந்தாய்வு மையம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பத்மினி வரவேற்று பேசினார். இதில் 'அன்புள்ள மாணவர்களுக்கு எல்லாம் சாத்தியம்- நீ நினைத்தால்' என்ற தலைப்பில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் வெ.இறையன்பு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் யார்? என்பதை சிந்திப்பதன் மூலம் தன்னை தானே உணர்ந்து கொள்வது, என் பலம் என்ன? என் பலவீனம் என்ன? என்பதை பட்டியலிட்டு அதன்படி திட்டமிட்டு நடப்பது போன்றவற்றின் மூலமாக மாணவிகள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

பலத்துடன் போராட்டம்

நம் பலவீனத்தை தெரிந்து கொண்டால் நம்முள் இருக்கும் பலத்துடன் போராடி வாழ்வில் முன்னேற முடியும். யார் எது சொன்னாலும் சோர்வடைவதோ, கோபப்படுவதோ கூடாது. மாணவிகள் தங்களுடைய பலத்தை பட்டியலிட்டு வாய்ப்பை கண்டுபிடியுங்கள். தண்ணீர் தேங்கினால் சாக்கடையாகிவிடும்.

அதுபோல நாம் எந்த இடத்திலும் தயங்கி தயங்கி நின்றுவிடக் கூடாது. ஆழ்ந்து யோசித்து செயல்பட வேண்டும். எங்கும், எதிலும் தயங்கி நிற்காமல் சிந்தித்து செயல்பட்டால் நீங்கள் அனைவருமே ஒரு நல்ல அரசு அலுவலராகவோ, நல்ல இல்லத்தரசிகளாகவோ ஆகலாம். மதிப்பெண்கள் குறைந்தால் தவறான முடிவை எடுக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு இறையன்பு பதில் அளித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை தமிழ்ஜோதி நன்றி கூறினார்.


Next Story