கல்வராயன்மலைப்பகுதி சாராய வியாபாரிகள் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓட்டம்
மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து 12 பேர் பலியான சம்பவத்தின் எதிரொலியால் போலீசுக்கு பயந்து கல்வராயன்மலைப்பகுதி சாராய வியாபாரிகள் வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர்
கச்சிராயப்பாளையம்
12 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து 12 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் பேலீசார் அதிரடி சோதனை நடத்தி சாராயம் விற்பனைசெய்வோர் மற்றும் வியாபாரிகளை கைது செய்து வருகிறார்கள்.
2 தனிப்படைகள்
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சங்கராபுரம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கச்சிராயப்பாளையம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை சாராய வியாபாரிகளின் புகலிடமாக கல்வராயன்மலை விளங்கி வருகிறது. இங்கு சாராயத்தை காய்ச்சி உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு கடத்தி விற்பனை செய்து வந்தனர். ஆனால் போலீசாரின் கிடுக்குப்பிடியால் சாராயம் காய்ச்சுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தப்பி ஓட்டம்
இந்த நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த சாராய வியாபாரிகள் சிலர் இரவோடு இரவாக கார் மற்றும் பஸ், ரெயில்களில் ஏறி ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அவர்களை பிடிப்பதற்காக வீடு தேடி சென்ற போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.