சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளில் ரூ.274 கோடிக்கு மதுபானம் விற்பனை - தீபாவளி விற்பனையை மிஞ்சியது


சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளில் ரூ.274 கோடிக்கு மதுபானம் விற்பனை - தீபாவளி விற்பனையை மிஞ்சியது
x

ஆகஸ்டு 14-ந் தேதி ஒரே நாளில் ரூ.274 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

75-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்தது. அதே நேரத்தில், சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இதனால், மது பிரியர்கள் அனைவரும் சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளான ஆகஸ்டு 14-ந் தேதியே மதுபானங்களை வாங்குவதற்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் குவிந்தனர். இதனால், டாஸ்மாக் மதுபான கடைகளில் அன்றைய தினம் மட்டும் வழக்கமான நாட்களை விட அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது.

இந்த நிலையில் ஆகஸ்டு 14-ந் தேதி எவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது என்ற தகவலை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்டு 14-ந் தேதி மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை மண்டலத்தில் ரூ.55.77 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.53.48 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.54.12 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.52.29 கோடிக்கும் விற்பனை நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மதுரை மண்டலம் முதல் இடத்தையும், கோவை மண்டலம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் மதுபான விற்பனையில் தீபாவளி தினத்தன்று நடைபெறும் விற்பனையே ஒரு நாள் விற்பனையில் அதிக அளவாக இருக்கும். அதன்படி, கொரோனா காலம் முடிவடைந்து கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ந் தேதி தீபாவளி தினத்தன்று நடைபெற்ற டாஸ்மாக் மதுபான விற்பனையானது ரூ.225.42 கோடி ஆகும். ஆனால், சுதந்திர தினத்துக்கு முந்தைய தினமான ஆகஸ்டு 14-ந் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு, கடந்த ஆண்டு தீபாவளி தின மதுபான விற்பனையை மிஞ்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக டாஸ்மாக் விடுமுறை தினத்துக்கு முந்தையநாள் விற்பனை சுமார் ரூ.200 கோடி அளவிற்கு இருக்கும் என்றும், ஆகஸ்டு 14-ந் தேதி நடைபெற்ற விற்பனையானது கடந்த கால விற்பனையைவிட 5 சதவீதம் அதிகரித்து இருந்தாலும், மதுபான விற்பனை மதிப்பு அதிகமாக இருப்பதற்கு விலை உயர்வும் ஒரு காரணம் என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story