செம்போடை கிராமத்தில் சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்
செம்போடை கிராமத்தில் சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்
செம்போடை கிராமத்தில் சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என வேதாரண்யம் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்றியக்குழு கூட்டம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவா் அறிவழகன், ஒன்றிய ஆணையர்கள் ராஜூ, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவலர் ரமேஷ் தீர்மானங்களை படித்தார்.
இதில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-
நடராஜன்: ஊராட்சி ஒன்றியம் மூலம் கடந்த 2020-21-ம் ஆண்டு சாலை பணிகள் உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் செய்த ஒப்பந்தக்காரர்களுக்கு ரூ.10 கோடி வர வேண்டியுள்ளது. இந்த தொகையை உடனே வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெகநாதன்: ஒன்றியத்திற்குட்பட்ட செம்போடை ஊராட்சி பகுதியில் 24 மணி நேரமும் சாராய விற்பனை நடைபெறுகிறது. எனவே சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.
தெரு விளக்குகள்
அமுதா: கடந்த 2 ஆண்டுகளில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்பட வில்லை.
ராஜேந்திரகுமார்: மருதூர் வடக்கு ஊராட்சி பகுதியில் பைப்புகள் தான் உள்ளன. தண்ணீர் வருவதில்லை. ஊராட்சியில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை வேண்டும்.
வைத்தியநாதன்: தாணிக்கோட்டகம் ஊராட்சி பகுதியில் உள்ள தெருவிளக்குகளில் கடந்த 3 ஆண்டு காலமாக பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை. பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து சீரமைக்க வேண்டும்.
வேதரெத்தினம்: முள்ளி ஆறு, மானங்கொண்டான் வடிகால் ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
கண்ணகி: ஆயக்காரன்புலம் ஊராட்சி பகுதியில் மின் மயானம் வேண்டும். பிரதான கடைத்தெரு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
துணைத்தலைவர்: கோடியக்காடு எல்லை பகுதியான பழைய சுமைதாங்கி பகுதியில் பஸ் பயணிகளின் நலன் கருதி புதிய பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும்.
தலைவர்: ஒன்றிய பகுதியில் சாலைப்பணிகள் உள்பட தேவையான வளர்ச்சி பணிகள் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் கட்சிப்பாகுபாடியின்றி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் பேசினர். முடிவில் ஒன்றிய ஆணையா் ராஜூ நன்றி கூறினார்.