சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2022 6:45 PM GMT (Updated: 10 Dec 2022 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாரல் மழை

மாண்டஸ் புயல் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

குளிர்ந்து காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்ததால், மக்கள் வீடுகளில் முடங்கினார். சாலைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சாரல் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதனிடையே நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில், போச்சம்பள்ளி-11.1, கிருஷ்ணகிரி- 10.7, பாரூர்-9, ஊத்தங்கரை, கெலவரப்பள்ளி அணையில் தலா- 8.4, பெனுகொண்டாபுரம்-7.2, ஓசூர்- 7.1, சூளகிரி- 7, கிருஷ்ணகிரி அணை-6.2, சின்னாறு அணை, தளியில் தலா- 5, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டையில் தலா- 4, அஞ்செட்டி, நெடுங்கலில் தலா- 3 மில்லிமீட்டர் பதிவானது.

பொதுமக்கள் அவதி

ஓசூரில் நேற்று பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டு சாலைகள் வெறிச்சோடியது.மேலும், எப்போதும் இல்லாத அளவிற்கு கடுங்குளிர் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். நடுங்க வைத்த குளிரால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.

மேலும் வேலைக்கு சென்றவர்கள், பல்வேறு பணிகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் ஸ்வெட்டர், குல்லா, ஜெர்கின் அணிந்தவாறு காணப்பட்டனர். மொத்தத்தில் சாரல் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


Next Story