தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
வேலூரில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வேலூரில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பாலியல் பலாத்காரம்
வேலூர் பகுதியை சேர்ந்தவர் 43 வயது கூலித்தொழிலாளி. இவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் மனைவி அவரை விட்டு கடந்த 2021-ம் ஆண்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களின் 15 வயது மகன், 13 வயது மகள் பாட்டி வீட்டில் வசித்து அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
அந்த வீட்டிற்கு எதிரே உள்ள வாடகை வீட்டில் குழந்தைகளின் தந்தையும் குடியேறி உள்ளார். மகனும், மகளும் அவ்வப்போது பாட்டி வீட்டில் இருந்து எதிரே உள்ள தந்தையை பார்க்க சென்றுள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு ஒருநாள் தொழிலாளி குடிபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். அதனால் பயந்து போன மகள் இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை.
இந்த நிலையில் வயிறு வலிப்பதாக மாணவி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக உறவினருடன் கடந்த ஆண்டு சென்றார். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவள் கர்ப்பமாக இருப்பதையும், பிரசவவலி ஏற்பட்டிருப்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே சிறிதுநேரத்தில் மாணவிக்கு குழந்தை பிறந்தது.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து தொழிலாளியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தியா ஆஜராகினார். வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார். அதில், பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக கூறினார்.
இதையடுத்து போலீசார் பலத்த காவலுடன் தொழிலாளியை வேனில் வேலூர் மத்திய ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.