மைத்துனரை எரித்து கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
உத்தமபாளையத்தில் மைத்துனரை தீ வைத்து எரித்துக் கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
தொழிலாளி
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (வயது 48). இவர் ஒரு கேண்டீனில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ஹெலினா வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு இவர்களுக்கு இடையிலான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த கால கட்டத்தில், ஹெலினா வளர்மதியின் மகன் உத்தமபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். அவரை, ஹெலினா வளர்மதியின் சித்தி பாத்திமா ராணியின் மகன் லாரன்ஸ் என்ற அமலா லாரன்ஸ் (31) தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார்.
எரித்துக்கொலை
இந்நிலையில் தனது மனைவி பிரிந்து சென்றதற்கு மைத்துனர் லாரன்ஸ் தான் காரணம் என பிரிதிவிராஜ் கருதினார். இதனால், கடந்த 22-11-2017 அன்று உத்தமபாளையத்தில் உள்ள ஒரு பள்ளி அருகில் லாரன்ஸ் நின்று கொண்டு இருந்த போது, பிரிதிவிராஜ் அங்கு வந்தார். அப்போது அவர் ஒரு பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை லாரன்ஸ் மீது ஊற்றினர். இதனால், அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால், பிரிதிவிராஜ் அவரை துரத்திச் சென்று அவர் மீது தீ வைத்தார்.
இதில் அவர் உடல் முழுவதும் தீப்பற்றியது. பின்னர் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று 2017 டிசம்பர் 1-ந்தேதி அவர் வீடு திரும்பினார். ஆனால் பலத்த காயங்கள் ஆறாத நிலையில் அவர் 4-ந்தேதி உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்து அவருடைய தாய் பாத்திமாராணி உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பிரிதிவிராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுகுமாறன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கின் இறுதி விசாரணையை தொடர்ந்து மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், லாரன்சை கொலை செய்த பிரிதிவிராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து பிரிதிவிராஜை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.