தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 22 Jun 2023 1:00 AM IST (Updated: 22 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தேவாரத்தில் மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

தேனி

தொழிலாளி கொலை

தேனி மாவட்டம் தேவாரம் திடீர்நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி, தேவாரம் அருகே பெரியதேவிகுளம் கண்மாய் பகுதியில் உள்ள களிமண் தொட்டியில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தார். அதை கேள்விப்பட்ட அவருடைய தாயார் செல்லத்தாய் சம்பவ இடத்துக்கு ஓடிச் சென்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மகனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியில் செல்லப்பாண்டி உயிரிழந்தார்.

இதுகுறித்து செல்லத்தாய் கொடுத்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என்று தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில், செல்லப்பாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த புலன் விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான காளிமுத்து (46) என்பவர் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.

கள்ளக்காதல்

காளிமுத்துவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரிடம் காளிமுத்து அளித்த வாக்குமூலத்தில், 'எனது மனைவிக்கும், செல்லப்பாண்டிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. அதுகுறித்து எனக்கு தெரியவந்ததும் இருவரையும் கண்டித்தேன். அதன்பிறகும் அவர்கள் பழக்கத்தை கைவிடவில்லை. இதனால், செல்லப்பாண்டியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அவரை பெரியதேவிகுளம் கண்மாய்க்கு அழைத்துச் சென்று மது அருந்த வைத்தேன். மதுபோதையில் இருந்த அவருடைய தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கி, அருகில் இருந்த களிமண் தொட்டிக்குள் மூழ்கடித்தேன். அவர் இறந்து விட்டதாக எண்ணி அங்கிருந்து தப்பிச் சென்றேன்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் காளிமுத்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பளித்தார்.

கொலை வழக்கில் காளிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்தும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பு கூறினார். இதையடுத்து காளிமுத்துவை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story