மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி என்.எஸ்.ஹக்கீமை விடுதலை செய்ய வேண்டும் – சீமான்
மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி என்.எஸ்.ஹக்கீமை விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் சிறைக்கொட்டடியில் வாடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா என்.எஸ்.ஹக்கீம் மூளையிலுள்ள நரம்புக்கட்டியால் உடல்நலம் குன்றி, அவதிப்பட்டு வரும் செய்தியறிந்து மனவேதனையடைந்தேன். சென்னை, புழல் சிறையிலுள்ள ஐயா ஹக்கீம் பல ஆண்டுகால தொடர் சிறைவாசத்தால் உடல்நலிவுற்று முதுமையின் பிடியில் வாடி வரும் நிலையில், தற்போது அவரது மூளையிலுள்ள நரம்பில் கட்டி இருப்பதாகவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும், அகற்றினாலும் கை,கால்கள் செயலிழக்க நேரிடுமெனவும் மருத்துவர்கள் கூறியுள்ளது அவரது குடும்பத்தினரைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது வாழ்வின் பெரும்பகுதியை சிறைக்குள்ளேயே கழித்திட்ட ஐயா ஹக்கீம் உடல்நலக்குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது இறுதிக்காலத்தையாவது குடும்பத்தோடு கழிக்க வேண்டுமெனக் கோருவது மிக நியாயமானது. இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக நாங்கள் போராடியபோது விளைந்த அரசியல் நெருக்கடியினால் ஆதிநாதன் குழுவை அமைத்த திமுக அரசு, ஓராண்டைக் கடந்தும்கூட எவ்வித செயலாற்றலையும் செய்யாது இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காகக் கடந்த காலத்தில் குரல்கொடுத்து வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், ஐயா ஹக்கீமின் விடுதலைக்கான முன்நகர்வுகளை உடனடியாகச் செய்து முடிக்க வேண்டியது காலக்கடமையாகும்.
ஆகவே, மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா என்.எஸ்.ஹக்கீம் மருத்துவத்தேவையைக் கணக்கில் கொண்டு, அவரது விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்துசெய்து, அவரைக் காப்பாற்ற வேண்டுமெனவும், பன்னெடுங்காலமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.