உரங்களுடன் இணை பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து


உரங்களுடன் இணை பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து
x
தினத்தந்தி 17 Aug 2022 8:51 PM IST (Updated: 17 Aug 2022 9:09 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் விருப்பமின்றி உரங்களுடன் இணை பொருட்கள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உரம் விற்பனை

தேனி மாவட்டத்தில் தற்போது முதல் பருவ நெல் சாகுபடி சுமார் 5,400 ஹெக்டேர் பரப்பளவில் நடந்து வருகிறது. அத்துடன் மானாவாரி விவசாயமும் மும்முரமாக நடந்து வருகிறது. விவசாய பயன்பாட்டுக்கு விவசாயிகள் உரம் வாங்கும் போது கூடுதல் இணைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், அனைத்து வட்டாரங்களிலும் காலமுறை அடிப்படையில் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள வேளாண்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தரமான இடுபொருட்கள் விவசாயிகளை சென்றடைவதை உறுதிப்படுத்த ஆய்வின்போது மாதிரிகள் எடுத்து அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உர விற்பனையாளர்கள் மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண்ணை பெற்று சாகுபடி பரப்புக்கு தகுந்தவாறு உரங்களை பரிந்துரை செய்து, விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். தேவைக்கு அதிகமான உரங்களை பரிந்துரை செய்யக்கூடாது. விவசாயிகள் விருப்பமின்றி கூடுதல் இணை பொருட்களைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தெரியவந்தால் உரக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1985-ன் கீழ் விதிகளை மீறிய செயல்களுக்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் உர விற்பனையாளர்கள் தங்கள் உர விற்பனை நிலையங்களில் உரங்களின் விலைப் பட்டியல் விவசாயிகளின் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும்.

உரிமம் ரத்து

அனுமதி பெறப்பட்ட நிறுவனங்களின் முதன்மைச் சான்று படிவங்கள் பெற்று கொள்முதல் செய்ய வேண்டும். உர மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாமல், உரிய ஆவணங்களின்றி உரம் விற்பனை செய்தாலும், கூடுதல் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வினியோகம் செய்வது தெரிய வந்தாலும் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயிகள் உரம் கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் புகார்களுக்கு தேனி வேளாண்மை உதவி இயக்குனரிடம் (தரக்கட்டுப்பாடு) தெரிவிக்கலாம். புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story