எல்.ஐ.சி. வாடிக்கையாளரிடம் ரூ.2½ கோடி சுருட்டிய ஏஜெண்டு கைது
சென்னையில் எல்.ஐ.சி. வாடிக்கையாளரிடம் ரூ.2½ கோடி சுருட்டிய ஏஜெண்டு கைது செய்யப்பட்டார்.
சென்னை தியாகராயநகர், சாம்பசிவம் தெருவைச்சேர்ந்தவர் மனோகரன். தொழில் அதிபரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ளேன். 2013-ம் ஆண்டு முதல் எல்.ஐ.சி.யில் பாலிசிதாரராக சேர்ந்து பணம் கட்டி வருகிறேன். இடையில் கொரோனா தொற்று நோய் காலத்தில் எல்.ஐ.சி. ஏஜெண்டு ரவீந்திரன் மூலமாக பணம் கட்டினேன். ஆனால் அவர் நான் கட்டிய பணத்தை முறையாக எல்.ஐ.சி. நிறுவனத்தில் கட்டாமல் மோசடி செய்து விட்டார்.
எல்.ஐ.சி. நிறுவனத்தின் ரசீதை போல போலியான ரசீதையும் தயாரித்து கொடுத்து விட்டார். அவர் என்னிடம் ரூ.2½ கோடி அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு (ஆவண மோசடி பிரிவு-1) போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ஜான்விக்டர் ஆகியோர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். எல்.ஐ.சி. ஏஜெண்டு ரவீந்திரன் (வயது 50) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மோசடியில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை வேளச்சேரியை சேர்ந்த அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இதுபோல் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டாரா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.