விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; தொல்.திருமாவளவன் பங்கேற்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; தொல்.திருமாவளவன் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம், குறிஞ்சாகுளம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற சம்பவங்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய குடியரசு கட்சி தேசிய செயலாளர் எம்.ஏ.சூசை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலைய செயலாளர் பாலசந்தர், மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், மண்டல அமைப்பு செயலாளர் தமிழினியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன், சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் பீர் மைதீன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தொல்.திருமாவளவன் எம்.பி.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாங்குளம் கிராமத்தில் எதுவும் அறியாத பிஞ்சு குழந்தைகளிடம் தீண்டாமையை விதைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரிய செயல். 21-வது நூற்றாண்டில் இந்த மாதிரி சம்பவம் நடைபெறுவது என்பது பெரும் குற்றம்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியானதால் காவல்துறை அவர்களை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தில் ஊர் கட்டுப்பாடு என்று கூறியிருப்பதின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இன்னும் 6 மாதத்திற்கு ஊருக்குள் வரக்கூடாது என்ற உத்தரவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

வழக்கை திரும்ப பெற வேண்டும்

குறிஞ்சாகுளம் கிராமத்தில் காந்தாரியம்மன் கோவில் சம்பந்தமாக முதல்-அமைச்சர் ஒரு கமிட்டி அமைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ ஆகியோரிடம் பேசி உள்ளேன். இதுசம்பந்தமாக இருதரப்பு சமுதாய மக்களை அழைத்து பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த ஊரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 160 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் அமைத்ததற்காக 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளை போலீசார் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் டேனியல் சிங், சதுரகிரி முருகன், சுரேஷ், சுந்தர், தமிழப்பன், இக்பால், கதிரேசன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் திருமா சுந்தர் நன்றி கூறினார்.


Next Story