69% இடஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தி மத்திய அரசுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடிதம்
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மதுரை,
தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மத்திய அரசின் அறிவில் மற்றும் தொழில்நுட்ப கழகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 30 இடங்களை கொண்ட முதுநிலை உயிரி தொழில்நுட்பவியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.
விண்ணப்பத்தின் கீழ்ப்பகுதியில் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக உரிய வருமானச்சான்று இணைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாமக நிறுவனர் ராமதாஸ், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முதுநிலை உயிரி தொழில்நுட்பவியல் படிப்பிற்கான விண்ணப்பப்படிவத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்ததை மாற்றி தமிழக அரசின் அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை உறுதிப்படுத்தி மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.