உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் - ஓ.பன்னீர்செல்வம் ரம்ஜான் வாழ்த்து
உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட ரம்ஜான் திருநாளில் உறுதியேற்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈகைத் திருநாளாம் "ரம்ஜான்" திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிலைநிறுத்தி; உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி; தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டு, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.
ரமலான் மாதத்தின் புனிதத்தை உணர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.
இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.