வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம்... 'சைபர்' குற்றங்களை 'சைபர்' ஆக்குவோம்


வலைத்தள வலைகளில் விழாமல் இருப்போம்... சைபர் குற்றங்களை சைபர் ஆக்குவோம்
x

‘சைபர்' குற்றம் என்றால் என்ன தெரியுமா? சாலையில் நடந்து போகிறோம். எதிரே வந்து ஒருவர் திடீர் என்று கத்தியைக் காட்டி மிரட்டி, ‘‘சத்தம் போட்டால் குத்திக்கொன்றுடுவேன். எடு மணிப் பர்சை’’ என்கிறார். பயத்தால் பர்சை கொடுக்கிறோம், அவர் பறந்துவிடுகிறார். இதை வழிப்பறி என்கிறோம். இதுபோன்ற செயல்களை மனிதர்கள் செய்வதால், இதை மனிதக்குற்றம் என்று சொல்லலாம்.

கம்ப்யூட்டர், செல்போன்கள் உதவியோடு வலைத்தள வழிகளில் இதுபோன்று நடைபெறுவதுதான் தொழில்நுட்ப வழிப்பறி. இதை சைபர் குற்றம் என்கிறோம்.

இந்த இரண்டு வழிப்பறிகளையும் மனிதர்கள்தான் செய்கிறார்கள். முதல் வழிப்பறியை மனிதன் நேரடியாகச் செய்கிறான். இரண்டாவதை தொழில்நுட்பங்களில் நுழைந்து அவனே செய்கிறான். இரண்டிலும் நாம் பணத்தை இழக்கிறோம். பயமுறுத்தப்படுகிறோம். அவமானப்படுகிறோம்.

சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

இன்று மின்னணு தொழில்நுட்பம் (டிஜிட்டல் டெக்னாலஜி) வளர்ந்து, இணைய தளத்தின் பயன்பாடு எழுச்சி அடைந்து வருவதுடன், சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

* வங்கி ஏ.டி.எம். கார்டு காலாவதியாக போகிறது. அதனை புதுப்பிப்பதற்கு உங்களது ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய குறியீடு எண்ணை கொடுங்கள் என்று தமிழ் கலந்த இந்தியில் பேசி வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகிறார்கள்.

அவர்கள் வங்கியில் இருந்துதான் பேசுகிறார்கள் என்று நினைத்து ரகசிய குறியீடு எண்களை கொடுத்து, பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.

* வங்கியில் ஆதார் கார்டு எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுவிடும், மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் மின் சேவை நிறுத்தப்படும், போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணத்தை செலுத்துங்கள் என செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயிலுக்கு அனுப்பும் மோசடி 'லிங்க்'குகள் மூலம் நிழல் உலகில் இருந்து கொண்டு மோசடி மன்னர்கள் பணம் பறித்து வருகிறார்கள்.

* நெட் பேங்கிங் வசதி துண்டிக்கப்பட்டுவிடும், பகுதி நேர வேலைவாய்ப்பு, ஆன்லைன் திருமண மோசடி, ஆபாச வீடியோ கால் அழைப்பு, முக்கிய பிரமுகரின் பெயரில் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி கணக்குகளை தொடங்கி, அந்த நபரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் பறித்தல் என மாறு வேடங்களில் நம்மை சுற்றியே அலைகிறது சைபர் குற்றங்கள்.

* கேரளாவில் 68 வயது முதியவரை சமூக ஊடகம் மூலம் உல்லாச வலையில் வீழ்த்தி ரூ.23 லட்சம் பறித்த ரஷிதா என்ற பெண் சிறைச்சாலையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.

* கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்கு 50 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்குவதாக 'லிங்க்' ஒன்றை சமூக ஊடகங்களில் மோசடிக்காரர்கள் அனுப்பினார்கள். இதன் தீய நோக்கத்தை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தனர்.

சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆசையை தூண்டும் விதமாக தூண்டிலை வீசி, அதில் மாட்டிக்கொள்பவர்களை லாவகமாக அமுக்கிவிடுகிறார்கள். இதனால் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, பலர் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள்.

சிலந்தி வலை போன்று பின்னிக்கிடக்கும் இணைய வலையில், விழுந்தால் நாம் இழப்பது பணம் மட்டும் அல்ல மானமும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

'சைபர் கிரைம்' குற்றவாளிகள் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் பல கொள்ளை கும்பல்கள் செயல்படுகின்றன. அந்த கும்பலை சேர்தவர்கள் யார்? என்று அடையாளம் காண்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

புதுப்புது அவதாரம் எடுக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை ஒடுக்குவது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சவாலான பணியாகும். எனவே பொதுமக்கள்தான் சைபர் கிரைம் என்ற மாய வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். அப்போதுதான் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையை சைபர் (பூஜியம்) ஆக்கமுடியும்.

சைபர் குற்றங்கள், அதன் பாதிப்புகள், தடுக்கும் வழிமுறைகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

விழிப்புணர்வு




சைபர் கிரைம் போலீஸ் துணை சூப்பிரண்டு தாமஸ் ஜேசுதாசன்:- இன்றைய விஞ்ஞான வளர்ச்சி காலத்தில் அனைவரின் கைகளிலும் 'ஸ்மார்ட்' செல்போன்கள் தவழ்கின்றன. புதுப்புது செயலிகளும் அறிமுகமாகி வருகின்றன. இந்த செயலிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னரே பதிவிறக்கம் செய்ய வேண்டும். தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்தால் நம்முடைய பணம் பறிபோகும் அபாயம் உள்ளது.

அதேபோன்று செல்போன் எண்ணுக்கு 'லிங்க்' உடன் வரும் குறுந்தகவலில் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது போன்று ஆசை வார்த்தை கூறும் குறுந்தகவலை தவிர்த்துவிட வேண்டும். சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

பாதுகாப்பு நம் கைகளில்


சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சுந்தரராஜன்:- தவறாக பயன்படுத்தப்படும் நோக்கம் இருப்பதால், சமூக ஊடகங்களில் தனிப்பட்ட விஷயங்களை பகிரவேண்டிய அவசியம் இல்லை. தங்களுடைய சுய விவரங்களை நண்பர்கள், உறவினர்கள் மட்டும் பார்க்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் சமூக ஊடகங்களில் இருக்கின்றன. இந்த தொழில்நுட்ப வசதியை பகிரவேண்டும் என்று நினைப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக தனிப்பட்ட புகைப்படங்கள், விவரங்களை குறிப்பிடும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எந்த சூழலிலும் எல்லை மீறிவிடக்கூடாது. உணர்வு ரீதியிலான உரையாடல்களை ஒருபோதும் சமூக ஊடகங்களில் வைக்கக்கூடாது.

இதனால் பண இழப்பு, நிம்மதி இழப்பு போன்றவை ஏற்படக்கூடும். சைபர் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை பிரிவுகள் சட்டத்தில் உள்ளன. எனவே சைபர் கிரைம் குற்றவாளிகள் நீதிதேவதையின் பார்வையில் இருந்து ஒருபோதும் தப்பமுடியாது. குற்றவாளிகள் எப்போதும் குற்றம் செய்வதற்கு புதுப்புது வழிகளை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். எனவே நம் பாதுகாப்பு என்பது நம் கைகளில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனமாக இருக்கும்.

ஓ.டி.பி.யை பகிரக்கூடாது



சைபர் கிரைமில் பணியாற்றிய போலீஸ் துணை கமிஷனர் (தலைமை அலுவலகம்) எஸ்.ஆர்.செந்தில்குமார்:- சமூக ஊடகங்களை பயன்படுத்தும்போது, சுயவிவரங்கள் அடங்கிய 'புரோபைல்', பகிரும் தகவல்களை நம்பிக்கையானவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் 'லாக்' செய்து வைக்க வேண்டும். சமூக ஊடகம் என்பது பரந்து விரிந்தது. அதில் பெண் என்ற பெயரில் ஆண் கூட இருக்கலாம். அதனால் யாரிடம் பழகும்போதும், குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். யாராவது தனிப்பட்ட படங்களை திருடி 'மார்பிங்' செய்து, 'பிளாக்மெயில்' செய்தால் சைபர் கிரைம் போலீசில் தைரியமாக புகார் தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிப்பவர்கள் வேண்டுகோள் விடுத்தால், அவர்களின் தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படும்.

சமூக ஊடக கணக்குகளை முடக்கி, அதில் தொடர்பில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்புமாறு தகவல் வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக தன்னுடைய வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், எஸ்.எம்.எஸ். உள்பட வெவ்வேறு ஊடகங்களின் மூலமாக தங்களுடைய தொடர்புகளுக்கு, யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று தகவல் தெரிவிக்க வேண்டும். வங்கிகள் ஒருபோதும் வாடிக்கையாளர்களிடம் 'ஓ.டி.பி'. கேட்பது இல்லை. எனவே எந்த காரணத்தை கொண்டும் 'ஓ.டி.பி.'யை யாரும் பகிரக்கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் 'லிங்க்'குகளை ஒருபோதும் திறக்கக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இருந்தால் சைபர் குற்றங்களை தவிர்க்கலாம்.

ஆசை வார்த்தைகளுக்கு...



மோசடியால் பணத்தை இழந்த வெங்கடாச்சலம்:- என்னுடைய மனைவி சசிகலாவின் செல்போன் எண்ணுக்கு, பிரபலமான வேலைவாய்ப்பு இணையதளத்தில் இருந்து பேசுவதாக கூறி வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பேசினார்கள். அவர்கள் என்னுடைய மகன் திருமலை சுவாமிக்கு, தனியார் கம்பெனி ஒன்றில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறினார்கள். இதனை நாங்கள் நம்பிக்கொண்டு, அவர்கள் கேட்கும்போதெல்லாம் பல்வேறு தவணைகளாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்தோம். வங்கி பரிவர்த்தனை மூலமாக அவர்களுக்கு செலுத்திய ரசீது கூட என்னிடம் இருக்கிறது.

ஓசூரில் பணியில் சேருவதற்கான பணி ஆணையும் அனுப்பி வைத்தார்கள். பணியில் சேருவதற்கான முந்தைய நாளன்று, எங்களிடம் பேசியவர்களின் செல்போன் எண் திடீரென 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்துதான் நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். எங்களுக்கு வந்த இந்த நிலை இனி யாருக்கும் வரக்கூடாது. முன்பின் தெரியாதவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு யாரும் மயங்கி விடாதீர்கள். விழிப்புணர்வுடன் இருந்தால் இதுபோன்ற திருடர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.

அதிர்ச்சி


தனியார் கம்பெனி ஊழியர் கீதாஸ்ரீ :- பணப்பையில் பணம் எடுத்து சென்றால் 'பிக் பாக்கெட்' திருடர்கள், வழிப்பறி திருடர்கள் அபகரித்து சென்று விடுவார்களோ? என்று அச்சம் இருந்தது. பணமில்லா பரிவர்த்தனை அறிமுகமான பின்னர் பணத்தை கையில் எடுத்து செல்வது குறைந்துள்ளது. இது பாதுகாப்பு என்று நினைத்தால் டிஜிட்டலிலும் சைபர் குற்றவாளிகள் புகுந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 'ஆன்லைன்' மூலம் நூதன மோசடி என்று அவ்வப்போது வரும் செய்திகளை பார்க்கிறபோது அதிர்ச்சியாக இருக்கிறது. சைபர் கிரைம் போலீசாரின் விழிப்புணர்வு பதிவுகளை நான் முறையாக பின்பற்றி வருகிறேன்.

குறுந்தகவலை அழித்து விடுவேன்



பட்டதாரி வாலிபர் மணிகண்டன் :- செல்போன் எண்ணில் குறுந்தகவல் வந்தாலே யாரிடம் இருந்து வந்திருக்கிறது என்பதை ஆர்வத்துடன் பார்ப்பது எனது வழக்கம். அப்படி ஒரு முறை எனது செல்போன் எண்ணுக்கு 'குலுக்கல் முறையில் உங்கள் செல்போன் எண்ணுக்கு பம்பர் பரிசு கிடைத்துள்ளது. நீங்கள் குறிப்பிட்ட இந்த 'லிங்'கில் உங்கள் தகவலை தெரிவியுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் உடனே சுதாரித்துக்கொண்டேன். அதன்பின்னர் இதுபோன்று வரும் தேவையில்லாத குறுந்தகவலை பார்க்காமல் அழித்து விடுவேன். ஆன்லைன் மோசடி கும்பலின் பிடியில் சிக்காமல் இருக்க இதுபோன்ற தேவையற்ற குறுந்தகவலை மக்கள் தவிர்க்கவேண்டும். அப்படி இருந்தால்தான் சைபர் குற்றவாளிகளின் பிடியில் இருந்து தப்பமுடியும்.

கடும் தண்டனை

பாதிக்கப்பட்ட பெயர் வெளியிட விரும்பாத இளம்பெண்: நான் இப்போதுதான் கல்லூரியில் படிப்பை முடித்திருக்கிறேன். சென்னை நெற்குன்றத்தில் வசித்து வருகிறேன். திடீரென ஒரு நாள் எனது செல்போனில் என் முகத்தை வைத்து 'மார்பிங்' செய்து, ஒரு நிர்வாண படம் வந்தது. பெயர் இல்லாமல் ஒரு நம்பரில் இருந்து வந்தது. அதற்கு கீழே வந்த செய்தியில், 'என்னை உனக்கு தெரியும். என்னிடம் பேசு. இல்லையென்றால் இந்த படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன்' என்று கூறப்பட்டு இருந்தது. நான் பயந்துபோய் அந்த நம்பரை 'பிளாக்' செய்துவிட்டேன். ஆனால் என் நண்பர்களுக்கு அந்த படம் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தோம். இப்போது சைபர் கிரைம் போலீசார் அந்த நபரை கண்டுபிடித்துவிட்டதாகவும், நான் விசாரணைக்கு வரவேண்டும் என்றும் கூறியிருகிறார்கள். இதுபோன்ற வழக்குகளை வேகமாக புலன்விசாரணை செய்து, இத்தகைய கொடும் குற்றச்செயல்களை செய்பவர்களுக்கு கடும் தண்டனை அளித்தால்தான் எதிர்காலத்தில் மற்றவர்களுக்கும் இதுபோன்று குற்றங்களை செய்து மாட்டிக்கொண்டால், வாழ்க்கையே வீணாகிவிடும் என்ற பயம் ஏற்படும். இந்த குற்றங்களும் நடைபெறாது.

பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்வது எப்படி?

* இணையதள வங்கி பரிவர்த்தனைகளுக்காக தரமான மற்றும் 'லைசென்ஸ்' பெற்ற 'ஆபரேட்டிங் சிஸ்டத்தை' பயன்படுத்தவேண்டும்.

* தகவல்களை உள்ளீடு செய்வதற்கு முன்பு, எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலமாக பெறப்படும் 'யூ.ஆர்.எல்.'களை பரிசோதிக்கவேண்டும்.

* பொதுவாக பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத இணைய இணைப்புகளை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

* இ-மெயில், இ-காமர்ஸ் தளங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில், யாரும் எளிதில் கண்டுபிடிக்காத வகையில் 'பாஸ்வேர்டு'களை தேர்வு செய்யவேண்டும்.

உங்களுக்கு தெரியுமா?

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகை 139 கோடி. இவர்களில் சுமார் 55 கோடி பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். நமது நாட்டில் நடப்பாண்டு முதல் காலாண்டில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 198 சைபர் கிரைம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2-வது காலாண்டில் 15.3 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 37 ஆயிரத்து 658 ஆக உள்ளது. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பதிவாகிய சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெறும் 748 மட்டும்தான். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 'ஜெட்' வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கின்றது. கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் பதிவான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 707 ஆகும்.

சைபர் குற்றங்களுக்கு கடிவாளம் போட்டால் மட்டுமே, வங்கி கணக்குகளில் இருக்கும் பணம் தப்பிக்கும் என்பதே நிதர்சனம். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.


Next Story