மண்பானைகளில் பொங்கலிடுவோம்:களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை-இல்லத்தரசிகள் கருத்து


மண்பானைகளில் பொங்கலிடுவோம்:களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை-இல்லத்தரசிகள் கருத்து
x

களைகட்டி வரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் மண்பானைகளில் பொங்கலிடுவோம் என்று இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்தனர்.

சேலம்

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் பண்டிகையாகும். அதனை கொண்டாட தமிழ்நாடு தயாராகிவிட்டது.

பொங்கல் பரிசு

அரசு தரப்பில் ரூ.1000 பரிசும், கரும்புடன் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. எங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண் பானைகள், கலர் கோலப்பொடி, புத்தாடைகள் விற்பனை களைகட்டி வருகிறது.

சேலம் மாநகரில் வின்சென்ட், கடைவீதி மற்றும் ஓமலூர், காடையாம்பட்டி, தேவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

தமிழர்களின் பண்பாடு

மல்லூரை சேர்ந்த இல்லத்தரசி தமிழ்செல்வி:-

எத்தனையோ பண்டிகைள் வந்தாலும், தமிழர்கள் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகைக்கு தனி சிறப்பு உண்டு. நாம் வளர்க்கும் கால்நடைகளுக்கும், விவசாயிகளுக்கும் பெருமை சேர்க்கும் உழவர் திருநாள் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு வாசலில் மண்பானையில் பொங்கல் வைத்து வழிபடுவோம். புதிய பானையில் புத்தரிசியிட்டு அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும். தை மாதத்தில் பொங்கும் பொங்கல் போல ஆண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப்பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது எங்களது நம்பிக்கை. கூடவே கரும்பு, காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் படைத்து சூரியனை வழிபடுவோம். இயற்கையை வழிபடுவதன் மூலம் செல்வ வளம் பெருகும், வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம். பொங்கல் பண்டிகையின் சிறப்பு மற்றும் மகத்துவம் குறித்து எங்கள் குழந்தைகளுக்கு சிறுவயது முதலிலேயே சொல்லி கொடுத்து வளர்த்து வருகிறோம். இதனால் தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் மறையாமல் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம்.

தமிழ்நாட்டின் அடையாளம்

ஆத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சிவப்பிரியா:-

பொங்கல் பண்டிகை என்பது தமிழ்நாட்டின் அடையாளம். அதை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்த நன்னாளில் உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி கூறும் தினமாக கொண்டாடப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள் கொண்டாடியது போன்று பொங்கல் திருநாளை நடத்தி நம்முடைய கலாசாரத்தையும், பண்பாட்டையும் பேணிகாக்க வேண்டும். இன்றைய கால இளைஞர்களிடம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான ஆர்வம் குறைந்துவிட்டது என்று கூறமுடியாது. பசங்க வேட்டியிலும், பெண்கள் சேலையும் அணிந்து எங்களது கல்லூரியில் பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாடினோம். இதுபோன்ற நமது நாட்டின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் விழாக்களை கொண்டாட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

கிராமமே விழாக்கோலம்

தேவூர் மயிலம்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி வள்ளிநாயகி:-

எங்கள் கிராமத்தில் பழமை மாறாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது, போகிப்பண்டிகையில் வேப்பிைல, ஆவாரம் பூ, பூலப்பூ ஆகியவற்றால் வீடு, கோவில்களில் வைத்து காப்பு கட்டி வழிபாடு செய்தும், பொங்கல் பண்டிகை தினத்தில் மண்பானையில் பொங்கல் வைத்து அதை படையலிட்டு வணங்குவோம். மாட்டு பொங்கல் தினத்தில் கால்நடைகளை குளிக்க வைத்து கலர் பொடி தூவியும், கொம்பு சீவி அதற்கு சாயம் பூசியும் தோரணம் கட்டி அலங்கரிக்கப்படும். அதன்பிறகு தோட்டத்தில் பொங்கல் வைத்து அதை கால்நடைகளுக்கு வழங்கி பொங்கலோ பொங்கல் என கோஷம் எழுப்பி கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தி வருகிறோம். இதுதவிர, பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தி பெண்களுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் பரிசுகளை வழங்குவோம். குறிப்பாக பெண்கள் கோவிலில் ஒன்றாக கூடி கும்மியடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளால் கிராமமே விழாக்கோலமாக இருக்கும்.

வெகு விமரிசையாக...

விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலைப்பல்கலைக்கழக பேராசிரியை டாக்டர் பிரியாமதி:-

பொங்கல் தினத்தன்று மண் பானையில் புது அரிசியில் பொங்கல் வைத்து அதை சூரியனுக்கு படையல் செய்வதுடன் கரும்பு, மஞ்சள் தோரணங்கள் கட்டி கொண்டாடப்படும் பொங்கல் விழாவை நகரங்களில் பார்க்க முடிவதில்லை. உழைப்பையும், செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்துவதற்காக குடும்ப உறுப்பினர்கள் காலையில் தூங்கி எழுந்திருப்பதற்கு முன்பாக கியாஸ் அடுப்பில் பொங்கலை வைத்து பொங்கல் பண்டிகையை இல்லத்தரசிகள் முடித்துகொள்கின்றனர். இது தவறான பழக்கம். இயற்கையை சார்ந்து பொங்கல் பண்டிகையை இயற்கையுடன் இணைந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் வீட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும்.

இளைய சமுதாயத்தினர் பண்பாட்டுக்கும், கலாசாரத்திற்கும் உரிய மரியாதை அளிப்பதில்லை. அதை கடைப்பிடிப்பதும் இல்லை. அதற்கான ஆர்வமும் இளைஞர்கள் மத்தியில் குறைந்துவிட்டது. பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி வரும் காலங்களில் கலாசாரத்தை பறைசாற்றும் பண்டிகைகளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும்.

மண்பானை விற்பனை

காடையாம்பட்டியில் மண்பானை விற்பனை செய்யும் மாணிக்கம்:-

நான் 45 ஆண்டுகளாக மண் பானைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறேன். ஆனால் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் செலவு செய்யவே யோசிக்கிறார்கள். ஏன் பொங்கல் கொண்டாட வேண்டும். குக்கரில் பொங்கல் வைத்தால் போதாதா? என்று எல்லாம் யோசிக்கின்றனர். தற்போது பொங்கலுக்கு ஒருசில நாட்களே இருக்கின்றன. பொதுவாக மக்களிடம் மண் பாண்டங்கள் பயன்படுத்துவது மிகவும் குறைந்து விட்டது. மண் பானை விற்பனை குறைவாகவே உள்ளது. அதேசமயம், சாதாரண வகை மற்றும் கலர் பானைகள் விற்பனை அதிகளவில் நடக்கிறது. குறிப்பாக சொல்லபோனால் இந்த ஆண்டு மண் பானை விற்பனை மிகவும் மந்தமான நிலையில் உள்ளது. போதிய வருமானம் இல்லாததால் குலதொழிலை விடக்கூடாது என்பதற்காக ஒரு சிலர் மட்டும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றவர்கள் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். அடுத்த தலைமுறையினருக்கு மண் பானை என்று ஒன்று இருந்ததே தெரியாமல் போய்விடும் என்று தான் தெரிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story