''வடமாநில மக்கள் சிந்திக்கட்டும்''
‘‘வடமாநில மக்கள் சிந்திக்கட்டும்’’ அப்துல்லா எம்.பி. கூறினார்.
புதுக்கோட்டையில் அப்துல்லா எம்.பி. (தி.மு.க.) நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது தடகளத்திற்கு இல்லாமல் இருந்தது. தற்போது மாநில சங்கத்தோடு இணைக்கப்பட்ட சங்கமாக புதுக்கோட்டை மாவட்ட தடகள சங்கம் உருவாகியுள்ளது. வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை இளையோருக்கான மாநில தடகள போட்டி நாமக்கல்லில் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் வகையில் வருகிற 8, 9-ந் தேதிகளில் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது'' என்றார். தொடர்ந்து அவா் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், "இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்ற சர்வாதிகாரத்தின் அடிப்படையில் செய்து வருகின்றனர். முதலில் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஒரே நாடு ஒரே சுடுகாடு என்று வரட்டும். பின்னர் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசலாம். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு விமர்சனங்கள் வேறு மாறியாக வரட்டும். விமர்சனம் தான் உரையாடலை உருவாக்கும். ஒரு உரையாடல் தான் சிந்தனையை பலமாக்கும். வடமாநிலங்களில் உரையாடல் வரட்டும், அவர்களும் சிந்திக்கட்டும், எது நல்லது என்று நினைக்கிறார்களோ அந்த முடிவுக்கு அவர்கள் வரட்டும். சனாதனம் குறித்து திட்டமிட்டு சர்ச்சையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவாக்கவில்லை'' என்றார்.