மேலூரில் சிறுத்தைப்புலி நடமாட்டம்?


மேலூரில் சிறுத்தைப்புலி நடமாட்டமா? என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

மதுரை

மேலூரில் சிறுத்தைப்புலிநடமாட்டமா? என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

சிறுத்தைப்புலி நடமாட்டம்?

மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே தேவன்குளம் உள்ளது. இங்கு எம்.மலம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நேற்று காலை 7 மணியளவில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பறவைகள் திடீரென கூச்சலிட்டு பறப்பதையும் அதன் அருகே 2 சிறுத்தை புலிகள் ஓடியதை பார்த்து அதனை அவர் செல்போனில் படம் எடுத்துள்ளார். அந்த 2 சிறுத்தைப்புலிகளும் அருகிலுள்ள வாழைத்தோப்புக்குள் சென்று மறைந்துள்ளன. இந்த வீடியோ மேலூர் பகுதியில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை வன இலாகா அதிகாரிகள் வனவர் மூர்த்தி மற்றும் வனக்காப்பாளர் குருசுந்தரி ஆகியோர் தேவன்குளம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது தரையில் மர்ம விலங்கின் கால் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிறுத்தைப்புலிகளை பார்த்த ரமேஷ் கூறியதாவது:-

தினமும் நடை பயிற்சி சென்று தேவன்குளத்தில் குளிப்பது பழக்கம். அவ்வாறு சென்றபோது அங்கு பறவைகள் சிதறி பறப்பதையும் அங்கு சுமார் 2 அடி உயரமுள்ள 2 சிறுத்தை புலி குட்டிகள் செல்வதையும் கண்டு அதனை செல்போனில் வீடியோ எடுத்தேன். வன இலாகாவினர் வந்து அங்கிருந்த கால் தடங்களை ஆய்வு செய்ததில் ஒரு இடத்தில் புலியின் கால் தடத்தை போன்றதை கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் வேறு ஏதாவது வன விலங்காக இருக்கலாம் என்றும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் புலிகள் இல்லை என்று கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுவிட்டனர். இப்பகுதியில் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் நடப்பதற்குள் அரசு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.. இந்த சம்பவத்தினால் மேலூரில் உள்ள எம்.மலம்பட்டி மக்கள் இரவில் வெளியே செல்லாமல் அச்சத்துடன் வீடுகளில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story