பாண்டமங்கலம் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம்


பாண்டமங்கலம் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டம்
x

பாண்டமங்கலம் அருகே சிறுத்தைப்புலி நடமாட்டமா என வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

சிறுத்தைப்புலி

பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை, வெள்ளாளபாளையம், ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள், கன்றுகள், நாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை கடந்த 15 நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வந்த சிறுத்தைப்புலி கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை.

கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தைப்புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் கால் தடங்களை வைத்து கால்நடைகள் கொல்லப்பட்ட கிராமங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

18 கண்காணிப்பு கேமராக்கள்

செஞ்சுடையாம்பாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு சிறுத்தைப்புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்தனர். இந்தநிலையில் மாவட்ட வனச்சரகர் பிரவீன்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தைப்புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் 18 கண்காணிப்பு கேமராக்களையும், 2 கூண்டுகள் வைத்து சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தைப்புலியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் சிறுத்தைப்புலி எந்த கால்நடைகளையும் தாக்கவில்லை என்பதால் இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா அல்லது கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டதால் குவாரி பகுதியிலேயே தங்கி வெளியே வராமல் இருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

கால்தடங்கள்

இந்த நிலையில் பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூர் பகுதியில் உள்ள தோட்டப்பகுதியில் சிறுத்தைப்புலியின் கால் தடங்கள் பதிந்து இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ராமாயி ஆகியோரது தோட்டப்பகுதிக்கு சென்று சிறுத்தைப்புலியின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுத்தைப்புலி வந்து சென்றதற்கான பழைய கால்தடங்கள் என்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story