பரமத்திவேலூர் அருகே தொடரும் அட்டகாசம்:மாட்டை கடித்துவிட்டு ஓடிய சிறுத்தைப்புலி
பரமத்திவேலூர் அருகே மாட்டை கடித்துவிட்டு ஓடிய சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
பரமத்திவேலூர்
சிறுத்தைப்புலி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் செஞ்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்ராஜா என்பவரின் மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த கன்றுகுட்டி மற்றும் அதே பகுதியில் கட்டப்பட்ட வளர்ப்பு நாயை கடந்த 5-ந் தேதி மர்மவிலங்கு கடித்து கொன்றது. இதையடுத்து மர்ம விலங்கின் கால்தடங்களை வைத்து ஆராய்ந்ததில் கன்றுக்குட்டி, ஆடு, நாயை கொன்றது சிறுத்தைப்புலி என உறுதியானது.
சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக கருதப்படும் இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை மற்றும் வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இருக்கூர் அருகே அடர்ந்த காட்டுப்பகுதியில் குவாரிக்கு அடுத்துள்ள புலிகரடு என்ற இடத்தில் சிறுத்தைப்புலி பதுங்கி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 10-ந் தேதி புளியம்பட்டி, ரங்கநாதபுரம் ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அடித்துக்கொன்றது. தொடரும் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
3 கூண்டுகள் வைப்பு
இந்த நிலையில் அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து ரங்கநாதபுரம், செஞ்சுடையாம்பாளையம் ஆகிய 2 இடங்களில் 3 கூண்டுகள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் இரவு நேரத்தில் டிரோன் கேமரா மூலம் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் குழுவினரும், கோவை, தேனி பகுதிகளில் இருந்து வந்துள்ள வன உயிரடுக்கு படையினரும் அப்பகுதியில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தைப்புலிக்கு மயக்க மருந்து செலுத்தும் கால்நடை மருத்துவ நிபுணர்கள் 2 பேர் தயார் நிலையில் உள்ளனர். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மாட்டை கடித்தது
இந்த நிலையில் வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே மாடு மற்றும் கன்றுக் குட்டிகளை கட்டி வைத்திருந்தார். இரவு அந்த பகுதிக்கு வந்த சிறுத்தைப்புலி அவரது வீட்டில் கட்டி வைத்திருந்த மாட்டை கடித்துள்ளது. இதனால் மாட்டின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது சிறுத்தைப்புலி அங்கிருந்து ஓடி விட்டது. சிறுத்தைப்புலி கடித்ததில் மாடு காயம் அடைந்தது.
இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தைப்புலி வெள்ளாளபாளையம் பகுதியில் பதுங்கி உள்ளதா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தைப்புலியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.