இருக்கூர் அருகே அட்டகாசம்:சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை


இருக்கூர் அருகே அட்டகாசம்:சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து   பிடிக்க நடவடிக்கை
x

இருக்கூர் அருகே சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பொதுமக்கள் சாலை மறியல்

பரமத்திவேலூர் தாலுகா, இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவரது மாட்டுத் தொழுவத்தில் கட்டி இருந்த கன்றுகுட்டியை மர்ம விலங்கு கடித்து கொன்று விட்டு சென்றது. இதேபோல் அதே பகுதியில் வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த வளர்ப்பு நாயை மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த இருக்கூர் கிராம நிர்வாக அலுவலர் வேணுகோபால், நாமக்கல் வனவர்கள் சந்திரசேகர், பிரியங்கா ஆகியோர் இறந்த கன்று குட்டியை பிரேத பரிசோதனை செய்தும், மர்ம விலங்கின் கால்தடங்களை பதிவு செய்தும் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அந்த பகுதியில் கேமராவை பொருத்தி கூண்டு வைத்து மர்ம விலங்கை பிடிக்க கோரி பரமத்தியில்- கபிலர்மலை செல்லும் இருக்கூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர், மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்ததை தொடர்ந்து சுமார்3 மணி நேர சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.

அமைச்சர் ஆய்வு

இந்தநிலையில் அங்கு வந்த நாமக்கல் மாவட்டகலெக்டர் ஸ்ரேயாசிங் மர்ம விலங்கு குறித்து வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினார். இதில் கன்றுகுட்டி, நாயை கடித்து கொன்ற அட்டகாசம் செய்து வந்தது சிறுத்தை புலிதான் என்பது தெரியவந்தது. மேலும் உடனடியாக சிறுத்தை புலியை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதனையடுத்து நாமக்கல் வனசரக அலுவலர் பெருமாள் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பனியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், டிரோன் மூலமும் கண்காணித்து வருகின்றனர்.

இப் பணிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கன்று, நாயை கடித்து கொன்றது சிறுத்தைப்புலிதான் என்பது உறுதியாகியுள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் எனவும், கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும் எனவும், சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 24 மணி நேரமும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் மாலை 6 மணிக்கு மேல் காலை 8 மணி வரை வீட்டில் இருந்து தனியாக வயல்வெளி பகுதிக்குள் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். ஆய்வின்போது மாவட்ட வனஅலுவலர் கஷ்யப் ஆர்.ஷஷாந்த் உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story