16ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு
16ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 15,900 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
கொப்பரை தேங்காய் கொள்முதல்
தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் விளைவித்த அரவை கொப்பரை, பந்து கொப்பரை ஆகியவற்றை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 500 டன் அரவை கொப்பரை மற்றும் 400 டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் காங்கயம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, அலங்கியம், மூலனூர், உடுமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்பட உள்ளன. இந்த மையங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு அரவை கொப்பரை ரூ.108.60 மற்றும் பந்து கொப்பரை ரூ.117.50 வீதம் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
வங்கிக்கணக்கில் வரவு
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரை மற்றும் பந்து கொப்பரைக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் அந்தந்த ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை விற்பனைக்குழு அலுவலகத்தை 0421 2213304 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
----------------