எலுமிச்சம்பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனை
வத்திராயிருப்பு பகுதிகளில் எலுமிச்சம் பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் எலுமிச்சம் பழம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதியில் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் விளைச்சல் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இருப்பினும் தற்போது எலுமிச்சம் பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுவது ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கிறது என்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். இங்கு தென்னை, வாழை, மா, கொய்யா, எலுமிச்சம் பழம் ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.வத்திராயிருப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் எலுமிச்சம் பழம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பெய்த தொடர்மழையினால் இந்த பகுதியில் உள்ள கிணறுகள், கண்மாய்கள் ஆகியவற்றில் விவசாயம் செய்வதற்கு போதுமான தண்ணீர் இருந்தது.ஆனால் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யவில்ைல. இருப்பினும் இருக்கின்ற தண்ணீரை வைத்து சாகுபடி செய்தோம். எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. கடந்த வாரம் எலுமிச்சம் பழம் கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ.90 வரை விற்பனையானது. இங்கு விளையும் எலுமிச்சம் பழங்களை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்று ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.
கடந்த சில நாட்களாக வியாபாரிகள் எலுமிச்சம் பழங்களை கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை வாங்கி செல்கின்றனர். தற்போது இந்த பகுதியில் கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.ஆதலால் கடைகளில் ஒரு கிலோ ரூ. 160 வரை விற்பனை செய்கின்றனர். இந்த சீசனில் குறைந்த அளவே விளைச்சல் உள்ளதால் எலுமிச்சம் பழத்தின் விலையும் உயர்ந்துள்ளது. மகசூல் குறைந்தாலும் விலை ஓரளவு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.