தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் ஆய்வு


தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் ஆய்வு செய்தார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தலைமையில், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஆகியோர் கொண்ட குழுவினர், மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் முன்னிலையில், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ரூ.22 கோடியில் 5 தளங்களுடன் கட்டப்படும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வல்லத்தில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டனர். செங்கோட்டை அருகே சீவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையங்களையும் ஆய்வு செய்தனர். மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த தனியார் நிறுவனத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தது. தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.22 கோடியில் கட்டப்படும் மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் இன்னும் 1½ ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் என்ற வகையில் ரூ.15 கோடி செலவில் தென்காசியில் உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது.

ெதன்காசியில் காவல்துறை தலைமை அலுவலகம் ரூ.54 கோடி செலவில் கட்டப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ளது. தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தென்காசி மாவட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.400 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சில பணிகள் முடிவடைந்து விட்டன. அவை ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும். சில பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story