வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்


வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
x

பாட்டாளி மக்கள் கட்சி மீது குறை கூற திமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் கட்டாயம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறியிருப்பதாகவும், அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தமிழக அரசு வந்திருப்பதாகவும் சட்டதுறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்த எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாத நிலையில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை தமிழக அரசு துணைக்கு அழைப்பது கண்டிக்கத்தக்கது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசு ஏற்படுத்திய தேவையற்ற சர்ச்சை தொடர்பாக நேற்றிரவு விளக்க அறிக்கை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தவறுகளை மூடி மறைக்க முயன்றிருக்கிறார். அமைச்சர் போன்ற உயர்பதவிகளில் இருப்பவர்கள் மக்களிடம் பொய் பேசுவது அழகல்ல.

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது அப்பட்டமான பொய். பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் காலங்களில் மட்டும் 10.50% இட ஒதுக்கீடு குறித்து பேசி பாமக மக்களை ஏமாற்றி வருவதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். இதன்மூலம் அவரது அறியாமையை நினைத்து பரிதாபப்படுகிறேன்.

மோசடியின் மொத்த உருவமாக இருந்து கொண்டு, சமூகநீதிக்காக சமரசமின்றி போராடி வரும் பாட்டாளி மக்கள் கட்சி மீது குறை கூற அமைச்சர் ரகுபதிக்கோ, திமுகவுக்கோ எந்தத் தகுதியும் கிடையாது. சமூகநீதி சார்ந்த விஷயங்களில் வன்னியர்களுக்கு திமுக செய்ததெல்லாம் துரோகம்தான். அதற்கு திமுக செய்ய வேண்டிய பரிகாரம் இட ஒதுக்கீடுதான். அதில் இனியும் தாமதம் செய்யாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அரசு உடனடியாக பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story