ராமநாதபுரத்தில் 27 ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு
ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளரை கண்டித்து நகராட்சியில் பணியாற்றும் 27 ஊழியர்களும் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளரை கண்டித்து நகராட்சியில் பணியாற்றும் 27 ஊழியர்களும் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பனிப்போர்
ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளராக சந்திரா பணி யாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாகவே ஆணையாளருக்கும் ஊழியர்களுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. ஆணையாளர் தங்களிடம் விரோத போக்குடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று நகராட்சி அலுவலகத்தில் வரிவசூல் மற்றும் வருவாய் பிரிவு, சுகாதார பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் சுமார் 27 ஊழியர்கள் ஒட்டு மொத்த மாக விடுப்பு கடிதம் எழுதி மேலாளர் நாகநாதனிடம் கொடுத்தனர்.
இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஊழியர்கள் மேற்கண்ட நகராட்சி ஆணையாளர் தங்களை அவமரியாதையுடன் நடத்துவதாக புகார் தெரிவித்தனர். விடுப்பு எடுத்த ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.
இதுகுறித்து மேலாளரிடம் கேட்டபோது நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 86 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் 27 பேர் இவ்வாறு விடுப்பு கடிதம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அத்தியாவசிய பணிகள்
இதுகுறித்து நகராட்சி ஆணையர் சந்திராவிடம் கேட்ட போது, நகராட்சியின் சார்பில் நகரில் மாஸ் கிளினீங் பணி நடைபெறுகிறது. இதுதவிர, பாதாள சாக்கடை பணி, தூய்மைப்பணி, வரிவசூல் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் குறித்து உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி பணிகளை மேற்கொள்ளும்படி கூறுகிறேன்.
இதற்கு ஊழியர்கள் ஒத்துழைப்பதில்லை. பணிகளை செய்ய மறுத்து இவ்வாறு விடுப்பு எடுத்துள்ளது குறித்து மதுரை மண்டல இயக்குனருக்கு தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நகராட்சி பெண் ஊழியர் ஒருவர் நகராட்சி ஆணையரை கண்டித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு பின்னர் விடுப்பில் சென்றதாக கூறப்படுகிறது.