அம்பையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
அம்பையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அம்பை:
நெல்லை மாவட்டம் அம்பை நீதிமன்ற அதிகார வரம்பில் இருந்த கடையம், ஆழ்வார்குறிச்சி குறு வட்டங்களை பிரித்து தென்காசி நீதிமன்றத்தோடு சேர்த்து வழக்குகளை நடத்த தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு அம்பை வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையி்ல் மூன்று சங்கத்தைச் சார்ந்த வக்கீல்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்பை வக்கீல் சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். வழக்காடும் வக்கீல்கள் சங்க தலைவர் வரம்தரும் பெருமாள் பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் ராம்ராஜ் பாண்டியன், செந்தில்குமார், சசிகலா ராணி, ராதிகா, ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சுமார் 50 -க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்துகொண்டனர். அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் செல்வஅந்தோணி நன்றி கூறினார்.