வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: டி.ஜி.பி. உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது ஐகோர்ட்


வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: டி.ஜி.பி. உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது ஐகோர்ட்
x

நெல்லை முன்னாள் எஸ்.பி.அருண் சக்திகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட் பதிவு செய்தது.

சென்னை,

நெல்லை மாவட்டம் மாறன்குளத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜரத்தினம். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் பல்வேறு மனித உரிமை வழக்குகளில் இவர் ஆஜராகி வந்தார்.

இவர் சென்னை ஐகோர்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடு இரவில் வீட்டிற்கு வந்த போலீசார் தன்னை அடித்து இழுத்துச் சென்றதாகவும், எந்த வழக்கும் பதிவு செய்யாமல் போலீஸ் நிலையத்தில் வைத்து தன்னை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், ஆனால் நெல்லை மாவட்ட முன்னாள் எஸ்.பி. அருண் சக்திகுமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே ராஜரத்தினம் உயிரிழந்துவிட்டதால், வழக்கை அவரது மனைவி சரோஜா நடத்தி வந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை அளித்துவிட்டதாக தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது நடவடிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட் விதித்த நிபந்தனைகளை மீறும் போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு தொடரப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் சம்பந்தபட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை, அதோடு எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் வழக்கறிஞரை பிடித்துச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி டி.ஜி.பி., நெல்லை மாவட்ட முன்னாள் எஸ்.பி. உள்ளிட்டோர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகவும், வழக்கிற்கு பதிலளிக்க டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுவதாகவும் கூறி, வழக்கை அடுத்த மாதம் 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story