சட்டக்கல்லூரி மாணவி துண்டுபிரசுரம் வினியோகித்ததால் பரபரப்பு
வத்தலக்குண்டுவில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவி துண்டுபிரசுரம் வினியோகித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மதுரை சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா பொதுமக்களிடம் துண்டுபிரசுரத்தை வினியோகம் செய்தார். அதில் மாநில அரசு மது மற்றும் போதை பொருட்களால் தமிழக குடும்பங்களை நாசப்படுத்துகிறது. சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. மேலும் அவர் கையில் பேனர் ஒன்றை வைத்திருந்தார். அதில், பிரதமர் மோடி நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த வங்கி கடன் தொகையை வசூலித்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க செலவிடவேண்டும் என்று எழுதியிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு வந்து நிரஞ்சனாவை அழைத்து பேசினர். பின்னர் அவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.