ஈரோடு மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாடாக உள்ளது சாலை விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சிறப்பு பேட்டி


ஈரோடு மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாடாக உள்ளது சாலை விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை  போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சிறப்பு பேட்டி
x

ஈரோடு மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், சாலை விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், சாலை விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்கள்-போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு சென்னையில் நடந்தது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், முதல்-அமைச்சரின் அறிவுரைகள் செயல்படுத்தப்படுவதையும், ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் துறை மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் "தினத்தந்தி" நிருபருக்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் அளித்த பதில்களும் வருமாறு:-

சட்டம்-ஒழுங்கு

கேள்வி: சென்னையில் நடந்த போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாட்டில் ஈரோடு மாவட்டம் சார்பில் என்ன விவரங்கள் பேசினீர்கள்?.

பதில்: ஈரோடு மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலை விபத்துகள், போதைப்பொருள், சாராயம், பொதுமக்களுக்கு போலீஸ் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினேன்.

கேள்வி: ஈரோடு மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு எப்படி உள்ளது?.

பதில்: ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது.

அபராதம் விதிப்பு

கேள்வி: விபத்துகளை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன?.

பதில்: சாலை விபத்துகளை தடுக்க தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்டத்தில் சுமார் 30 இடங்களில் புதிதாக தடுப்பு வேலிகள், வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. விபத்து உயிரிழப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை கட்டாயமாக வைத்திருக்கிறோம். தினமும் குறைந்த பட்சம் 800 வழக்குகள் போக்குவரத்து விதி மீறலுக்காக போடப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

போதைப்பொருள்

கேள்வி: போதைப்பொருள், சாராய விற்பனை அதிகமாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டு உள்ளதே?.

பதில்: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா காலத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் சாராயம் பரவலாக கிடைத்தது. தற்போது அது முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது. சமீபகாலமாக போதை மாத்திரை ஊசி மூலம் செலுத்தப்படுவது அதிகரித்து உள்ளது. இதை தடுக்க மருந்து கடைகளில் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறோம்.

கொள்ளை

கேள்வி: மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, திருட்டு, வழிப்பறி அதிகரித்து வருவது ஏன்?.

பதில்: குற்றச்சம்பவங்கள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது அதிகம் என்று கூற முடியாது. கொள்ளை, திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணையவழி குற்றங்கள்

கேள்வி: பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?.

பதில்: சட்ட ரீதியாக பெண்கள், குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம்.

கேள்வி: இணைய வழி குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதா?.

பதில்: இணைய வழி குற்றங்கள் இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய சவாலாக மாறி உள்ளன. ஆன்லைன் மூலம் எந்த ஒரு வேலை தேடுதல், பொருட்கள் வாங்குதல் நடவடிக்கையும் வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி ஏமாந்து பணத்தை இழந்து வருபவர்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன், அவர்கள் இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கை சைபர் கிரைம் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.

போலீசாருக்கு மன உளைச்சல்

கேள்வி: சமீப காலமாக போலீசார் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதாக தகவல்கள் வருகிறதே?.

பதில்: அனைத்து சனிக்கிழமைகளிலும் போலீசாருக்கு துணைக்கோட்ட அளவில் கூட்டு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அதில் யோகா, விளையாட்டு ஆகியவையும் உள்ளது. இது மனதுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

முதல்-அமைச்சரின் அறிவுரை

கேள்வி: முதல்-அமைச்சர் கூறிய அறிவுரைகள் செயல்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு இருக்கிறதா?.

பதில்: மாநாட்டில் முதல்-அமைச்சர் பேசும்போது, பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பல அறிவுரைகள் வழங்கினார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீஸ்துறை சாராத வரவேற்பாளர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டு ஆட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் புகார்தாரர்களிடம் கனிவாக பேசி, விவரங்கள் கேட்டு புகாரின் தன்மைக்கு ஏற்ப விசாரணை அதிகாரியிடம் அனுப்பி வைக்கின்றனர்.

எச்சரிக்கை

கேள்வி: சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் சூப்பிரண்டு என்ற முறையில் போலீசாருக்கு வழங்கும் அறிவுரை என்ன?.

பதில்: போலீசார் சட்டத்துக்கு புறம்பாக அல்லது அநாகரிகமாக நடந்து கொண்டால் கண்டிப்பாக துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பணியில் சிறு தவறுகள் செய்தால் அதுகுறித்து அறிவுரை வழங்கப்படும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினார்.


Related Tags :
Next Story