மல்லூர் அருகே மாம்பழக்கழிவுகளை ஏரிக்கரையில் கொட்டிய லாரி சிறைபிடிப்பு


மல்லூர் அருகே மாம்பழக்கழிவுகளை ஏரிக்கரையில்  கொட்டிய லாரி சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 9 July 2023 1:11 AM IST (Updated: 9 July 2023 4:47 PM IST)
t-max-icont-min-icon

மல்லூர் அருகேமாம்பழக்கழிவுகளை ஏரிக்கரையில் கொட்டிய லாரியை சிறைபிடித்தனர்.

சேலம்

பனமரத்துப்பட்டி

மல்லூர் அருகே மாம்பழக்கழிவுகளை ஏரிக்கரையில் கொட்டிய லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மாம்பழக்கழிவுகள்

சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள அம்மாபாளையம் ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமான லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அங்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள் அந்த லாரி டிரைவரிடம் விசாரித்தனர்.

இதில் அந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மாம்பழக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்திற்கு சென்று கொண்டிருந்ததும், இடையில் அந்த பகுதியில் நிறுத்தி மாம்பழக்கழிவுகளை வெளியேற்றியதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மாம்பழக்கழிவுகளை அங்கு கொட்டக்கூடாது எனக்கூறி அந்த லாரியை சிறைபிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவர் ரவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சிறைபிடிப்பு

இந்த விசாரணையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் பயோ கியாஸ் தயாரிக்கும் நிறுவனத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள மாம்பழக் கூழ் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து மாம்பழக்கழிவுகள் கொண்டு செல்லப்பட்டு அங்கு பயோ கியாஸ் தயாரிக்கப்படும் என தெரியவந்தது. அவ்வாறு வழக்கம்போல் நேற்று கொண்டு செல்லும்போது டேங்கர் லாரியிலேயே மாம்பழக்கழிவில் இருந்து கியாஸ் உருவாகி மாம்பழக்கழிவுகள் வெளியேற தொடங்கியதால் சாலையோரம் கழிவுகளை கொட்டி விட்டதாக லாரி டிரைவர் கூறியுள்ளார்.

பின்னர் மாம்பழக்கழிவுகளை அந்த பகுதியில் கொட்டக்கூடாது என எச்சரித்து அந்த லாரி டிரைவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு டேங்கர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் மல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story