விழுப்புரத்தில் சர்வீஸ் சாலையில் மண் சரிவு
விழுப்புரம் ஜானகிபுரம் சர்வீஸ் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் நகர எல்லையான ஜானகிபுரம் சந்திப்பில் இருந்து புதுச்சேரி வரை 29 கி.மீ. நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.1,013 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதில் விழுப்புரம் ஜானகிபுரத்தில் புறவழிச்சாலை தொடங்கும் இடத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி வாகனங்கள் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு ஜானகிபுரம் சந்திப்பு பகுதியில் வட்ட வடிவிலான மேம்பாலம் அமைக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஜானகிபுரம் சந்திப்பில் கூடுதல் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் மேம்பால திட்டம் மாற்றியமைக்கப்பட்டு திருச்சியில் இருந்து விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக சென்னை செல்வதற்கும், விழுப்புரம் நகர பகுதிக்குள் செல்வதற்கும் தனித்தனியாக 2 மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
சர்வீஸ் சாலை
மேலும் ஜானகிபுரம் பகுதியில் இருந்து புறவழிச்சாலை வழியாக இலகுரக வாகனங்கள் செல்ல மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்காக ரூ.15.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. தற்போது மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த மேம்பால பணிகள் காரணமாக வாகன போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு தடையின்றி வாகன போக்குவரத்து நடைபெற ஏதுவாக மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் செல்ல வசதியாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. அந்த சாலைப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலையில் அதன் வழியாக வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இவ்வழியாக கண்டமானடி, கண்டம்பாக்கம், மரகதபுரம், கொளத்தூர், அரியலூர்திருக்கை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக விழுப்புரம் வந்து செல்கின்றனர்.
அதுபோல் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளும், இந்த சாலை வழியாகவே விழுப்புரம் நகரில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ- மாணவிகள், வாகன ஓட்டிகள் என இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மண் சரிவால் விபத்து அபாயம்
இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையின்போது இங்குள்ள சர்வீஸ் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்ததோடு மண் அதிகளவில் சரிந்துள்ளதால் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கம்பிகளும் சேதமடைந்தன.
இவ்வழியாக எந்நேரமும் அதிகளவில் கனரக வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களும் சென்று வருகிற நிலையில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை உடனடியாக சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனை உடனடியாக சரிசெய்யாவிட்டால் மேலும் மண் சரிவு ஏற்பட்டு ஏதேனும் வாகனங்கள் சற்று அதிவேகமாக வரும்பட்சத்தில் விபத்து ஏற்பட்டு சாலையோர பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது.
சரிசெய்யப்படுமா?
ஆகவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதில் உடனடியாக தலையிட்டு மண் அரிப்பை சரிசெய்து சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.