பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்களின் ஒப்புதலுடன் நிலங்கள் கையகப்படுத்த வேண்டும்: ஓபிஎஸ்
மக்களிடம் ஒப்புதல் பெற முடியாவிட்டால் மாற்று இடத்தை தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான 4,700 ஏக்கர் நிலத்தில், அரசுக்கு சொந்தமான 2,400 ஏக்கர் நிலம் போக மீதமுள்ள 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தி.மு.க. அரசு முடிவு செய்து இருக்கிறது.
இதன்படி, வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலி பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்களும், குடியிருப்புகளும் தி.மு.க. அரசால் கையகப்படுத்தப்பட உள்ளன என்ற செய்தி அப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விமான நிலையத் திட்டத்தின் காரணமாக, 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்கள் வீடுகளை மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் இழந்து, அவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கையையும், அங்குள்ள மக்களின் கருத்துகளையும் ஆராய்ந்து பார்த்தால், பெயரளவிற்கு கருத்துக் கேட்பு கூட்டங்களை அவசர கதியில் நடத்திவிட்டு விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு துவங்க உள்ளது தெள்ளத்தெளிவாகிறது.
இந்த நடைமுறை, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதாகும். விமான நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படும் ஏழை-எளிய மக்களை, விவசாயிகளை அழைத்துப் பேசி, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்தினை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் நிலம் கையகப்படுத்துவதுதான் முறையாக இருக்கும். இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.
ஆனால், இதை செய்வதாகத் தெரியவில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட கிராமங்களில் காவல்துறை முகாம்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது போன்ற நடவடிக்கை அங்குள்ள ஏழை-எளிய மக்களை அச்சுறுத்துவதாக அமையும்.
எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படக்கூடிய ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய முழு ஒப்புதலைப் பெற்று, அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவர்களுடைய தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பொதுமக்களின் ஒப்புதல் கிடைக்கப் பெறவில்லை என்றால் மாற்று இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு மாறாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்தினை புறந்தள்ளி விட்டு, தன்னிச்சையாக அரசு செயல்படும் பட்சத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. களத்தில் குதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.