கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவை பயிற்சி அளிக்க வேண்டும்- வேளாண் உற்பத்தி ஆணையர்


கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவை பயிற்சி அளிக்க வேண்டும்- வேளாண் உற்பத்தி ஆணையர்
x

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவை பயிற்சி அளிக்க வேண்டும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

செங்கல்பட்டு

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு செயலாளர் வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண் உற்பத்தி ஆணையருமான சமயமூர்த்தி பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

விவசாயிகளுக்கு வருவாய்த்துறையின் மூலம் இ-அடங்கல் வழங்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும், வருடாந்திர பயிர்கள் மாதாந்திர பயிர்கள் என வகைப்படுத்தி அதன்மூலம் இ-அடங்கல் பணியை எளிதாக கையாளவும், வேளாண்மைத்துறையின் மூலமாக விவசாய குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார்.

நில அளவை பயிற்சி

தாம்பரம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும்பணி குறித்தும், இதுபோன்ற கால்வாய்கள் அமைக்கும் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சரியான முறையில் திட்டமிட்டு பணிகளை முடித்திட வேண்டும் எனவும்,

வருவாய்துறையில் நில அளவை செய்யும் பணியின் காலதாமதம் ஏற்படுவதை தவிர்த்திட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிலஅளவை பயிற்சி அளித்திட அறிவுறுத்தினார். மேலும், பட்டா மின்மயமாக்கலில் தற்போதைய நிலை குறித்தும், பட்டா மாறுதலில் நிராகரித்தல் அதிகமாக உள்ளதால் அதற்கான காரணங்களை கண்டறிந்து, பொதுமக்களுக்கு விரைவில் பட்டா கிடைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், இருளர் இன மக்களுக்கு பட்டாவழங்கி அவர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளுடன் வீடுகள் கட்டித்தர அறிவுறுத்தினார்.

மக்களைத்தேடி மருத்துவம்

மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனைதொடர்ந்து திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், காயார் ஊராட்சியில் மகளிர் திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு செயல்பட்டு வரும் பட்டுரோஜா மகளிர் சுய உதவிக்குழுவின் கடையை பார்வையிட்டார். தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், செங்கல்பட்டு மாவட்ட துணை கலெக்டர் ஷாஜீவனா வேளாண்மை துறை இணை இயக்குனர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


Next Story