காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு


காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு
x

காஞ்சீபுரத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.

காஞ்சிபுரம்

உலக புகழ்பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் வடக்கு வாசல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளை எனும் அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பை அதன் முன்னோர்கள் உருவாக்கி அதில் இருந்து வரும் வருவாயில் ஒரு பகுதியை கோவில் செலவுகளுக்கும், மீதத்தை கட்டளை செலவுகளுக்கும் வைத்து கொள்ள வேண்டும் எனவும், இந்த சொத்தானது காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும் எழுதி வைத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் இந்த சொத்தானது அறநிலையத்துறை காஞ்சீபுரம் சரக இணை ஆணையர் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த அமைப்பின் கீழ் சென்னை மற்றும் காஞ்சீபுரம் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது.

குறிப்பாக வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் 350 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த அமைப்பின் வாரிசுரிமை பரம்பரை அறங்காவலராக சி.வி.சந்திரசேகரன் என்பவரும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கொல்லா சிங்கண்ண செட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம் கட்டியது மற்றும் பயணிகள் தங்கும் விடுதி கட்டியது என சட்ட விரோத செயல்களையும் செய்து வந்ததாகவும், சொத்துகளை அறநிலையத்துறைக்கு தெரியாமல் விற்க முயற்சித்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் அறநிலையத்துறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து சந்திரசேகரை அறநிலையத்துறை இணை ஆணையர் பதவி நீக்கம் செய்ததுடன் கட்டளையின் தக்காராக காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமியை நியமித்தும் உத்தரவிட்டார்.

அதன்பேரில் முத்துலட்சுமி கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளையின் தக்காராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.மேலும் அறநிலையத்துறை காஞ்சீபுரம் சரக உதவி ஆணையர் (பொறுப்பு) லட்சுமி காந்தன் பாரதி தலைமையில் செயல் அலுவலர்கள் வேலரசு, கார்த்திகேயன், ஆய்வாளர் பிரித்திகா, தனி தாசில்தார் வசந்தி, கிராம நிர்வாக அலுவலர் கோகுலகிருஷ்ணன், சிவகாஞ்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கட்டளை அலுவலகத்துக்கு சென்று அதை மீட்டு தக்காராக முத்துலட்சுமி நியமனம் பற்றிய தகவலை கதவில் ஒட்டினார்கள்.

இதன் மூலம் கட்டளை இடத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் கட்டளை சொத்துகள் சம்பந்தமாக ஏதேனும் விவரங்கள் தேவைப்படுவோர் தக்காராக நியமிக்கப்பட்டுள்ள முத்துலட்சுமியை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.


Next Story