கூடலூர் ஈஸ்வரன் கோவிலில் விளக்கு பூஜை
கூடலூர் ஈஸ்வரன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.
கூடலூரில், தாமரைக்குளம் சாலையில் பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை மற்றும் பிரதோஷத்தையொட்டி நேற்று, 1,008 விளக்கு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பக்தர்கள் சிவன் வேடமணிந்து கையில் சூலாயுதம் ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் சூலாயுதத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். இதையடுத்து ஆன்மிக சொற்பொழிவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கிடையே கோவிலில் பராமரிப்பு பணிகள் எதுவும் செய்யாததால் தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோபுரங்கள் மற்றும் அதில் உள்ள சிற்பங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.