மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஏரிகள், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஏரிகள், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைகேட்பு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:-
பட்டா கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும். சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேல் சீமை கருவேல மரங்கள் உள்ளன. அதை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே அதனை உடனே அகற்ற வேண்டும். விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களில் ஒரு சில துறையை தவிர மற்ற எந்த துறையினரும் பதில் அளிப்பது கிடையாது. ஆதலால் அனைத்துத்துறைகளிலும் 15 நாட்களுக்குள் விவசாயிகளின் குறைகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
வாய்க்காலை தூர்வார
சிறுவந்தாடு பகுதியில் உள்ள வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது மழை பெய்து வருகிற நிலையில் உடனடியாக வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் 10 முதல் 15 கிராமங்கள் பயன்பெறும். எல்லீஸ்சத்திரம் அணை, தளவானூர் அணை ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். நாளுக்கு நாள் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் நூறு நாள் திட்ட வேலையில் ஈடுபடுபவர்களை விவசாய பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது கால்நடைகளுக்கு சலிப்புநோய் வருகிறது. இதனை தடுக்க தடுப்பூசி போட வேண்டும். வேளாண்துறை சார்பில் வழங்கப்படும் விதைகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு லாபம் வரக்கூடிய நெல் ரகங்களை வழங்க வேண்டும். பல்வேறு நோய் தாக்குதலால் கரும்பு விவசாயம் அழிந்துகொண்டு வருகிறது. அதனை சரிகட்ட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள மருந்தகத்தில் ஒரு கடையில் 15 சதவீதமும், மற்றொரு கடையில் 20 சதவீதமும் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து கடைகளிலும் 20 சதவீத தள்ளுபடியில் மருந்துகளை விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
கட்டுப்படியான விலை
மரக்காணத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூடியே உள்ளது. அதனை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நந்தன் கால்வாய் பகுதி முழுவதையும் தூர்வார வேண்டும். அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஏரிகள், நீர்வரத்து வாய்க்கால்களை மழைக்காலத்திற்கு முன்பாக தூர்வார வேண்டும். விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வெளிமாவட்ட வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும். அவர்கள் வந்து வியாபாரம் செய்தால்தான் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும். கேரளா மாநிலத்தில் உள்ளதைப்போல் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வதற்கு இங்கும் அனுமதியளிக்க வேண்டும். பனமலைப்பேட்டை ஏரியை தூர்வாரினால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மிகவும் பயனடையும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பதிலளித்து மாவட்ட கலெக்டர் பழனி பேசுகையில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எல்லீஸ்சத்திரம் அணையை சீரமைப்பதற்கு வருகிற 29-ந் தேதி டெண்டர் விடப்பட உள்ளது. தளவானூர் அணை அடுத்த ஆண்டு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளை எந்த நோய்களும் தாக்காதவாறு கால்நடைத்துறையினர் உரிய தடுப்பூசிகளை அனைத்து கிராமங்களுக்கும் சென்று போட்டுவிட அறிவுறுத்தப்படும். வருகிற ஆண்டு முதல் அனைத்து விதமான விதைகள் மற்றும் நெல் ரகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு மற்ற கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.