மீன்பிடிப்பதற்காக கரையை உடைத்த மர்ம நபர்கள்
ஓசூர் பேடரப்பள்ளி ஏரியில் மீன்பிடிப்பதற்காக மர்ம நபர்கள் கரையை உடைத்தனர்.
ஓசூர்
ஓசூர் மாநகராட்சி 3-வது வார்டு பகுதியில் பேடரப்பள்ளி ஏரியை சுற்றி பேடரப்பள்ளி, கங்கா நகர், காமராஜர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளும் உள்ளன. பேடரப்பள்ளி பகுதிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த ஏரி இருந்து வருகிறது. கடந்த மாதம் பெய்த கனமழையால் ஓசூர் மாநகரம் உட்பட்ட பகுதியில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. அந்த வகையில் பேடரப்பள்ளி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஏரியில் மீன் பிடிப்பதற்காக மர்ம நபர்கள் ஏரியின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். இதில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் அதிகளவில் வெளியேறி, தற்போது ஏரியில் பாதி அளவுக்கு தண்ணீர் குறைந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி, தண்ணீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஏரிக்கரையை உடைத்த மர்ம நபர்கள் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.