சாலையில் பாலை கொட்டி பெண்கள் போராட்டம்
சாலையில் பாலை கொட்டி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
சீர்காழி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலமாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உற்பத்தியாகும் பசும்பாலை ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வைத்தியநாதபுரம், கொண்டத்தூர் ஆகிய பகுதிகளில் பால் கொள்முதல் செய்ததற்கான தொகையை வழங்காமல் உற்பத்தியாளர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் ஆவின் நிர்வாகத்திடம் வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் கேட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் இருந்து பசும்பாலை கொள்முதல் செய்வது திடீரென நிறுத்தப்பட்டு விட்டதாகவும், இதன் மூலமாக 200 லிட்டர் பால் வீணாகி விட்டதாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆவின் நிர்வாகிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்குரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பாலை முறைப்படி கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பெண்கள், சாலையில் பாலை கொட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.