நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் திறப்பு குறைப்பு
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உபரி நீர் திறப்பு
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து கடந்த வாரம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கான முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.
அணையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரியில் அதிகமாக நீர் சேமிக்காமல், சராசரியாக 70 சதவீதம் மட்டுமே நீர் சேமிக்கப்பட்டது. மீதம் உள்ள உபரி நீர் திறந்து விடப்பட்டது.
குறைப்பு
குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த இருப்பு 8 ஆயிரத்து 655 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெரிதாக பெய்யவில்லை. இதனால் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நிலைமைக்கு ஏற்றார்போல் நீர் திறப்பின் அளவு படிப்படியாக குறைக்கப்படுகிறது. கோடைக்கு தேவையான நீர் சேமிக்க வேண்டியிருப்பதால் முழுமையாக திறந்து விடப்படவில்லை.
கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரி மட்டும் முழுமையாக நிரம்பி உள்ளது. இதனால் ஏரிக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் கால்வாய் மூலம் 135 கன அடியும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் 390 கன அடியும் என 525 கன அடி நீர் வருகிறது.
198 டி.எம்.சி. இருப்பு
ஏரிகளில் போதுமான நீர் சேமிக்கப்பட்டு வருவதால் சென்னை மாநகர பகுதிகளுக்கு 1,021 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி வினியோகம் செய்யப்படுகிறது. இதே அளவு குடிநீர் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள 90 நீர்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன அடி, அதாவது 224.297 டி.எம்.சி.யாகும். இதில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 833 மில்லியன் கன அடி அதாவது 198.833 டி.எம்.சி இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளிலும் 88.65 சதவீதம் நீர் இருப்பு உள்ளது என்று நீர்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.