குடும்பம் குடும்பமாக வேலை தேடி வரும் வட மாநில தொழிலாளர்கள்


குடும்பம் குடும்பமாக வேலை தேடி வரும் வட மாநில தொழிலாளர்கள்
x

தமிழகத்தை நோக்கி வடமாநில தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வேலை தேடி வந்து கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

திருப்பூர்


தமிழகத்தை நோக்கி வடமாநில தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வேலை தேடி வந்து கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

குறைந்த ஊதியம்

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதை நிரூபிக்கும் வகையில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வேலை செய்து வருகின்றனர். சமீப காலங்களாக வடமாநில தொழிலாளர்களின் வருகை பலமடங்கு அதிகரித்து வருகிறது. குடும்பத்துடன் தமிழகத்துக்கு இடம் பெயரும் தொழிலாளர்கள் பலரும் குழந்தைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

'தமிழகத்தை பொறுத்தவரை உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடமாநிலத் தொழிலாளர்களின் வருகை தொடங்கியது. ஆனால் உள்ளூர் தொழிலாளர்களை விட குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டு அதிக வேலை செய்வதால் வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு வைப்பதில் பலரும் ஆர்வம் காட்டத்தொடங்கினர்.

அந்தவகையில் நூற்பாலைகள், காகித ஆலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள் மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளிலும் வடமாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதுதவிர ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், கட்டுமானப்பணிகள், சாலைப்பணிகள் என அனைத்து பணிகளையும் இவர்கள் செய்துவருகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

விழிப்புணர்வு

தற்போது விவசாயப் பணிகளிலும் இவர்கள் கால் பதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்தவகையில் 'வட இந்திய நடவு ஆட்கள் கிடைக்கும்' என்ற வாசகத்துடன் விளம்பரப்பதாகை ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தவித்து வரும் விவசாயிகள் இந்த வட இந்திய தொழிலாளர்களை வரவேற்கத் தயாராகவே உள்ளனர். இதனால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஒருதரப்பினரும், உள்ளூரில் தொழிலாளர்கள் கிடைக்காததால் தானே அவர்களை நாடுகிறோம் என்று மறுதரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் குடும்பத்துடன் இங்கு வரும் பல தொழிலாளர்கள் பணி நிமித்தமாக அவ்வப்போது வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். கல்வியின் அவசியம் குறித்து இவர்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனால் தங்கள் குழந்தைகளுக்கு உரிய கல்வியை வழங்குவதில் இவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இவ்வாறு பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் குழந்தைகளும் தொழிலாளர்களாக மட்டுமே உருவாகும் சூழல் உள்ளது.

அரசு நடவடிக்கை

எனவே வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து முழுமையாக தகவல்கள் சேகரிக்கவும், அவர்களின் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து புள்ளி விபரம் சேகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கல்வியறிவில்லாத குழந்தையும் நமது தேசத்துக்கான இழப்பு என்பதை உணர்ந்து கொள்வது அவசியமாகும்' என்றனர்.


Related Tags :
Next Story