திருப்பூர், பல்லடத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அவுட்சோர்சிங் முறையை கண்டித்து திருப்பூர், பல்லடத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவுட்சோர்சிங் முறையை கண்டித்து திருப்பூர், பல்லடத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
அவுட்சோர்சிங் முறையை கண்டித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர்(சி.ஐ.டி.யு.) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி, பல்லடம், திருமுருகன்பூண்டி, வெள்ளகோவில், காங்கயம் மற்றும் தாராபுரம் ஆகிய நகராட்சிகளில் வேலை செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளா்கள், ஓட்டுனர்கள் மற்றும் டி.பி.சி. ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
ஒப்பந்த ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி வழங்க வேண்டிய ஊதியங்களை ஒப்பந்த நிறுவனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒப்பந்த நிறுவனங்கள் விதிமுறைகளின்படி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களின் வயது வரம்பை 21 முதல் 50 வரை என்று நிர்ணயம் செய்ததை கண்டித்தும், பல்லடம் நகராட்சியில் வேலை வழங்கப்படாமல் உள்ள டி.பி.சி. ஊழியர்களுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோாிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சி.ஐ.டி.யு. கட்சி நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
பல்லடம்
பல்லடம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 36 பேரும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 181 பேரும் பணி புரிந்து வருகின்றனர். பல்லடம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி நேற்று பல்லடம் பஸ்நிலையத்தில் அனைவரும் ஒன்றாக கூடி வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.
தூய்மை பணியாளர்கள் கூறுகையில், மாதம் தோறும் சம்பளம் 4 அல்லது 5-ந் தேதிக்குள் கிடைத்தது. தற்போது 11-ந் தேதி ஆகியும் சம்பளம் போடப்படவில்லை. ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறோம். இதை கண்டித்து வேலை நிறுத்தம் செய்கிறோம் என்றனர்.
இந்த போராட்டத்திற்கு 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ், 14-வது வார்டு உறுப்பினர் ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோர் சென்று ஆதரவு அளித்தனர். வேலை நிறுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள் பின்னர் நகராட்சி மண்டல இயக்குனரை சந்திப்பதற்காக திருப்பூர் புறப்பட்டு சென்றனர். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால், நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டன.